புத்ராஜெயா, ஜனவரி 22 – மஇகா மத்திய செயலவை உறுப்பினர் டத்தோ குமார் அம்மான், சங்கப் பதிவிலாகாவின் முடிவை எதிர்த்து உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்துள்ளதற்கு, மஇகா துணைத்தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
உண்ணாவிரதம் என்பது நமது மலேசியக் கலாச்சாரம் கிடையாது என்றும் சுப்ரா கருத்துத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சுப்ரா இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், “உண்ணாவிரதம் நம்முடைய கலாசாரம் கிடையாது. அதை அனுமதிக்கவும் முடியாது. அது இந்தியக் கலாச்சாரம். அதை அந்த நாட்டோடு விட்டுவிடுங்கள். நம்முடைய நாட்டிற்கு நல்ல விசயங்களை மட்டும் எடுத்துக் கொண்டு வாருங்கள்” என்று தெரிவித்துள்ளார்.
மஇகா தலைமைச் செயலாளராக தாம் நியமிக்கப்பட்டது செல்லாது என சங்கப்பதிவதிகாரி உத்தரவிட்டிருப்பதால், அதை மஇகா மத்திய செயலவை உறுப்பினர் டத்தோ குமார் அம்மான் இன்று வியாழக்கிழமை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்துள்ளார்.
புத்ராஜெயாவில் உள்ள சங்கங்களின் பதிவிலாகா அலுவலகம் முன்பு உண்ணாவிரதத்தை தொடங்குவதற்கு முன்னர், உள்துறை அமைச்சில் தாம் கடிதம் ஒன்றை ஒப்படைக்க இருப்பதாகவும் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.