Home நாடு சிட்னி, பாரிஸ் சம்பவங்கள் மலேசியாவிலும் நடக்கலாம் – நஜிப் எச்சரிக்கை

சிட்னி, பாரிஸ் சம்பவங்கள் மலேசியாவிலும் நடக்கலாம் – நஜிப் எச்சரிக்கை

627
0
SHARE
Ad

Najib Malaysiaகோலாலம்பூர், ஜனவரி 23 – மலேசியாவில் எந்த சூழ்நிலையிலும் ஐஎஸ் போன்ற தீவிரவாத இயக்கங்கள் உருவாக அனுமதிக்கக்கூடாது. காரணம் நாட்டின் அமைதியையும், ஒற்றுமையையும் அது போன்ற இயக்கங்கள் முற்றிலும் சீர்குலைத்துவிடும் என்று நேற்று முன்தினம் இரவு டிவி3 தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக தெரிவித்துள்ளார்.

நமது நாட்டில் ஐஎஸ், இசிஸ் மற்றும் இசில் போன்ற இயக்கங்களின் நடவடிக்கைகளில் சேர்பவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவே என்றாலும், நாட்டிற்கும், மக்களுக்கும் அது மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்றும் நஜிப் எச்சரித்துள்ளார்.

மேலும், இது குறித்து ‘சொவால் ஜாவாப்’ என்ற டிவி3 நிகழ்ச்சியில் பேசிய நஜிப், “சிறிய அளவிலான ஒரு தீவிரவாதக் குழு கூட நாட்டிற்கும், மக்களுக்கும் மிகப் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துவதை பார்க்க முடிகின்றது. அதற்கு பாரிஸ் ஓர் உதாரணம்” என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

பாரிஸ் மற்றும் சிட்னியில் நடந்தது போன்ற சம்பவங்கள் மலேசியாவிலும் நடக்கக்கூடும். எனவே அது போன்ற சம்பவங்கள் இங்கு நடக்காமல் தடுக்கும் நடவடிக்கைகளில் அரசு தீவிரமாக செயல்படுவதாகவும் நஜிப் குறிப்பிட்டுள்ளார்.

ஐஎஸ், இசிஸ் மற்றும் இசில் போன்ற தீவிரவாத நடவடிக்கைகளில் 39 மலேசியர்கள் ஈடுபட்டிருப்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியிருப்பதாகவும், அவர்களில் 2 பேர் மனித வெடிகுண்டாக செயல்பட்டு நிறைய மக்களின் இறப்பிற்குக் காரணமாக இருந்துள்ளதாகவும் நஜிப் தெரிவித்துள்ளார்.

இது போன்ற தீவிரவாத அச்சுறுத்தல்களைத் தடுக்க கடந்த வருடம் நாடாளுமன்றத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன என்றும், இந்த வருடம் மார்ச் மாதத்தில் தீவிரவாதத்திற்கு எதிரான புதிய சட்டங்கள் தாக்கல் செய்யப்படும் என்றும் நஜிப் தெரிவித்துள்ளார்.

மேலும், மலேசியர்கள் இஸ்லாமையும், புனிதப் போரையும் (ஜிகாட்) பற்றி நன்கு அறிந்து கொள்ள வேண்டும், அப்போது தான் இது போன்ற தீவிரவாத இயக்கத்தில் சேரும் எண்ணத்தில் இருந்து அவர்கள் காப்பாற்றப்படுவார்கள் என்றும் நஜிப் வலியுறுத்தியுள்ளார்.