Home நாடு குற்றவாளி சைருல் நாடு திரும்ப அதிக காலம் ஆகலாம்!

குற்றவாளி சைருல் நாடு திரும்ப அதிக காலம் ஆகலாம்!

582
0
SHARE
Ad

Altantunya-Featureகோலாலம்பூர், ஜனவரி 23 – அல்தான்துயா கொலை வழக்கில் தொடர்புடைய சைருல் ஆஸ்திரேலியாவிலிருந்து நாடு திரும்ப அதிக காலம் ஆகலாம் எனக் கூறப்படுகிறது.

இது தொடர்பான மலேசியாவின் கோரிக்கை நிராகரிக்கப்படும் பட்சத்தில் சைருல் ஆஸ்திரேலியாவில் நீண்ட காலம் சிறைவாசம் அனுபவிக்க வேண்டியிருக்கலாம்.

கடந்த செவ்வாய்க்கிழமை பிரிஸ்பேனில் தடுத்து வைக்கப்பட்ட சைருல், ஆஸ்திரேலியாவுக்குள் சுற்றுலா விசாவில் நுழைந்துள்ளார். எனினும் அனைத்துலகப் போலீசார் (இன்டர்போல்) அவருக்கெதிராக சிவப்பு நோட்டீஸ் பிறப்பித்ததும் சுற்றுலா விசாவை ஆஸ்திரேலிய அரசு ரத்து செய்தது.

#TamilSchoolmychoice

இதையடுத்து சட்டத்துக்கு புறம்பாக செயல்பட்ட வெளிநாட்டவர் என்ற குற்றச்சாட்டின் கீழ் அவர் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக ஆஸ்திரேலிய குடிநுழைவுத்துறை தெரிவித்துள்ளது.

“சைருல் விவகாரத்தில் மலேசிய அதிகாரிகள் காட்டி வரும் ஆர்வத்தை உணர்ந்துள்ளோம். எனினும் தனிப்பட்ட காரணங்களால் இதுகுறித்து மேற்கொண்டு எதுவும் தெரிவிக்க இயலாது,” என ஆஸ்திரேலிய குடிநுழைவுத்துறை செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

இதற்கிடையே சிட்னியில் உள்ள குடிநுழைவு தடுப்பு மையத்திற்கு சைருல் இடமாற்றம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சைருலை நாடு கடத்துமாறு மலேசிய அரசு விடுத்துள்ள கோரிக்கை தொடர்பாக ஆஸ்திரேலியா முடிவெடுக்க சற்றே காலமாகும் என்று கருதப்படுவதால், சைருல் ஆஸ்திரேலியாவின் தடுப்புக்காவலில் கணிசமான காலத்தை செலவிட வேண்டியிருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் சைருல் எதற்காக கைது செய்யப்பட்டுள்ளார் என்பதை அறிய அவரது மலேசிய வழக்கறிஞர் கமருல் ஹிஷாம் கமாருடின் முயற்சி மேற்கொண்டுள்ளார்.

“அடுத்து எத்தகைய நடவடிக்கையை மேற்கொள்வது எனத் தெரியவில்லை. ஏனெனில் சைருல் எதற்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்பது தெரிய வேண்டும். அதை வைத்தே அடுத்த கட்ட நடவடிக்கையை திட்டமிட முடியும்,” என்றார் கமருல் கமாருடின்.