பெர்லிஸ், ஜனவரி 24 – மலேசியா, தாய்லாந்து எல்லையில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பரண்களை மீறி சிகரெட் மற்றும் மது கடத்த முயன்ற இரு ஆடவர்களின் முயற்சி தோல்வி அடைந்தது.
இருவரும் சிகரெட் மற்றும் மது கடத்தும் கும்பலைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என மலேசிய போலீசார் கருதுகின்றனர்.
குறிப்பிட்ட அவ்விரு ஆடவர்களும் வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் இருநாடுகளின் எல்லைப் பகுதிக்கு காரில் வந்துள்ளனர். அக்காரில் தாய்லாந்து பதிவு எண் காணப்பட்டது.
இதையடுத்து தடுப்பரண்களை மீறி இருவரும் எல்லைக் கதவைக் கடக்க முயன்றுள்ளனர். ஆனால் கதவு திறக்காததால் இருவரும் காரை அதே இடத்தில் விட்டுவிட்டு, ஓட்டம் பிடித்தனர்.
இதையடுத்து அதிகாரிகள் எல்லைக் கதவு அருகே சோதனையிட்டபோது அதில் 20 கருப்பு உறைகளில் சிகரெட்டுகளும், 3 பெரிய உறைகளில் மது போத்தல்களும் இருப்பது தெரியவந்தது.
இரு ஆடவர்களும் இவற்றை தாய்லாந்துக்குள் கடத்திச் செல்ல உரிய தருணம் பார்த்து காத்திருந்திருந்ததாகக் கருதப்படுகிறது. இது தொடர்பாக மலேசிய, தாய்லாந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.