சுங்கைப்பட்டாணி, ஜனவரி 24 – சுங்கைப்பட்டாணியைச் சேர்ந்த முனைவர் லட்சா பிரபு எழுதியுள்ள ‘அன்னைக்கு ஓர் அந்தாதி’ கவிதைத் தொகுப்பு, இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரும், மஇகா தேசிய உதவித் தலைவருமான டத்தோ சரவணன் தலைமையில் இன்று வெளியீடு காணவுள்ளது.
மேலும், இந்த நிகழ்வில் தமிழ்நாட்டின் பிரபல இயக்குநரும் நடிகருமான கே.பாக்கியராஜ் சிறப்புப் பேருரை ஆற்றவுள்ளார். இதற்காக தனது மனைவி பூர்னிமாவுடன் பாக்கியராஜ் மலேசியாவிற்கு வருகை புரிந்துள்ளார்.
இன்று சனிக்கிழமை சுங்கைப்பட்டாணியிலுள்ள தாமான் கிளாடி சின்மின் சீனப்பள்ளி மண்டபத்தில் இரவு 7 மணிக்கு இந்த புத்தக வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெறவுள்ளது.
மேலும், இந்த விழாவில் மஇகா மகளிர் பிரிவின் தேசியத் தலைவி மோகனா முனியாண்டி கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார்.
அன்னையின் சிறப்புகளை கூறும் 125 கவிதைகளை மொத்தம் 250 பக்கங்களில் கொண்டுள்ள இந்நூல் மலேசியாவிலேயே முதல் முறையாக 8 x 8 என்ற அளவில் வெளியீடு காணவுள்ளது.
மருத்துவ உதவிக்காக நிதி
(நூல் வெளியீட்டில் கலந்து கொள்வதற்காக கே.பாக்கியராஜ் நேற்று தனது மனைவி பூர்னிமாவுடன் மலேசியா வந்தடைந்தார். அவர் அருகில் முனைவர் லட்சாப் பிரபு)
இதற்கு முன்பு ‘புரிந்த புராணம்; புரியாத புதிர்’, ‘வெற்றியின் வித்துக்கள்’ எனும் நூல்களை எழுதியுள்ள லட்சாப் பிரபு ‘அன்னைக்கு ஓர் அந்தாதி’ எனும் இந்த கவிதைத் தொகுப்பை தனது மகளின் மருத்துவ உதவிக்கு நிதி சேர்ப்பதற்காக எழுதியுள்ளார்.
கடந்த 6 ஆண்டுகளாக சுயநினைவின்றி வாழும் தனது அன்பு மகளுக்கும், அவளைப் போன்ற நிலையில் இருக்கும் 5 பிள்ளைகளுக்கும் உதவும் நோக்கில், தான் இந்த புத்தகத்தை வெளியீடு செய்வதாக லட்சாப் பிரபு குறிப்பிட்டுள்ளார்.
இந்த நூலுக்கு 100 ரிங்கிட் நன்கொடை அளித்து ஆதரவு தருமாறு லட்சாப் பிரபு கேட்டுக் கொண்டுள்ளார்.
மேல் விபரங்களுக்கு கீழ்காணும் எண்ணைத் தொடர்பு கொள்ளவும்:-
முனைவர் லட்சாப் பிரபு
செல்பேசி எண்: 016 – 4356900