பேங்காக், ஜனவரி 24 – ஆட்சியில் இருந்து விலக்கப்பட்ட தாய்லாந்து முன்னாள் பிரதமர் இங்லக் ஷினவத்ரா (படம்), அரசியலில் ஈடுபட 5 ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவர் மீது சிறைத்தண்டனை விதிக்க வழி செய்யும் சில குற்றச்சாட்டுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இங்லக் பதவி விலகக்கோரி தாய்லாந்தில் கடந்த ஆண்டு தீவிர போராட்டங்கள் நடைபெற்றன.
ஆட்சி அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாக இங்லக் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து கடந்த மே மாதம் அவரது ஆட்சியைக் கவிழ்த்தது ராணுவம்.
இந்நிலையில் தன் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில் தாய்லாந்து உச்சநீதிமன்றத்தில் விசாரணையை எதிர்நோக்க உள்ளார் இங்லக்.
குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக அந்நாட்டு தலைமை வழக்கறிஞர் (அட்டர்னி ஜெனரல்) அலுவலகம் தெரிவித்துள்ளது.
விவசாயிகள் தரும் அரிசிக்கு சந்தை விலையை விட கூடுதல் தொகை அளிக்கும் திட்டத்தை அறிவித்தது இங்லக் அரசு. இதன் வழி அரசுக்கு கோடிக்கணக்கில் செலவு ஏற்பட்டது. இத்திட்டம் தொடர்பாகவும் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதற்கிடையே தனக்கெதிரான குற்றச்சாட்டுகளை அடியோடு மறுத்துள்ள இங்லக், சட்டரீதியில் போராடப் போவதாக தெரிவித்துள்ளார்.
“நாட்டின் சட்டத்துடன் சேர்ந்து ஜனநாயகமும் மடிந்துவிட்டது. முடிவு எப்படி அமைந்தாலும், நான் குற்றமற்றவள் என்பதை நிரூபிக்கும் வரை போராடுவேன்.
தாய்லாந்து மக்களுக்கு தோள் கொடுப்பேன். ஜனநாயகத்தையும், சமுதாயத்தில் உண்மையான நீதிதியை நிலைநிறுத்தவும், மீண்டும் வளத்தை ஏற்படுத்தவும் நாம் இணைந்து செயல்பட வேண்டும்,” என இங்லக் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.