புதுடில்லி, ஜனவரி 24 – இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க வரும் அமெரிக்க அதிபர் ஒபாமா மீது தாக்குதல் நடத்த ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் திட்டமிட்டிருப்பதாக இந்திய உளவுத்துறை இந்திய அரசாங்கத்தை எச்சரித்துள்ளது.
இதனையடுத்து வழக்கத்தை விட கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்திய குடியரசு தின விழாவில் முதன் முறையாக அமெரிக்க அதிபர் ஒபாமா பங்கேற்க உள்ளார்.
அவரின் தற்போதய வருகை இந்தியா-அமெரிக்கா இடையே வர்த்தகம் தாண்டிய இணக்கமான உறவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை ரஷ்யாவுடன் இராணுவ ஒப்பந்தங்களை கொண்டிருந்த இந்தியா, அமெரிக்காவுடன் இராணுவம் தொடர்பான புதிய ஒப்பந்தங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், உலக நாடுகள் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்திற்கெதிராக கடுமையாக போராடி வரும் சூழலில், ஒபாமாவின் வருகையால், தீவிரவாதிகளுக்கெதிரான போரில் இந்தியாவும் பங்கேற்ற வாய்ப்புள்ளதாகவே அமெரிக்க வட்டாரங்கள் கூறுகின்றன.
புதிய வரலாற்றை ஏற்படுத்த இருக்கும் ஒபாமாவின் இந்திய வருகையை குலைப்பதற்காக லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷி முகம்மது ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதிகள் கைகோர்த்து செயல்பட முடிவு செய்துள்ளதாகவும்,
அவர்கள் இந்தியா- பாகிஸ்தான் எல்லை வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்திய உளவு பிரிவினர் டில்லி மற்றும் ஆக்ரா பிரிவு காவல்துறை அதிகாரிகளுக்கு எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை அனுப்பி உள்ளனர்.
அதில் ஒபாமாவின் மீது தாக்குதல் நடத்த ஐஎஸ் ஐஎஸ் பயங்கரவாதிகளும் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த சதிச் செயலுக்கு அவர்கள் இலங்கை மற்றும் மாலத்தீவுகளில் வாழும் நபர்களை பயன்படுத்த உள்ளதாகவும் கூறியுள்ளனர்.
உளவுப் பிரிவின் இந்த எச்சரிக்கையை தொடர்ந்து இந்தியா முழுவதும் காவல்துறையினர் பாதுகாப்பை பன்மடங்கு அதிகரித்துள்ளனர்.