புதுடெல்லி, ஜனவரி 25 – தமது இந்தியப் பயணத்தின்போது உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலை அமெரிக்க அதிபர் ஓபாமா பார்வையிடுவார் என முதலில் கூறப்பட்டது. ஆனால், அவரது தாஜ்மகால் பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய குடியரசு தினவிழாவில் பங்கேற்க உள்ளார் ஓபாமா. இதற்காக அவர் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை புதுடெல்லி வந்து சேர்ந்தார்.
விமான நிலையத்தில் ஒபாமாவை நேரடியாக சென்று வரவேற்கும் நரேந்திர மோடி
குடியரசு தின விழா முடிந்த பின்னர் ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலை தனது மனைவியுடன் சென்று அவர் பார்வையிடுவார் என கூறப்பட்டது.
இதையடுத்து தாஜ்மகால் அமைந்துள்ள பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மேலும் ஆக்ரா நகரம் முழுவதும் தூய்மைப்படுத்தப்பட்டது. குறிப்பாக தாஜ்மகாலை தூய்மைப்படுத்தும் பணியில் நூற்றுக்கணக்கானோர் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்திய பாதுகாப்பு படையினர் மட்டுமின்றி அமெரிக்க ரகசிய பிரிவு போலீசாரும் தாஜ்மகாலை சுற்றிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்நிலையில் ஓபாமா, தாஜ்மகாலை பார்வையிடப் போவதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
சவுதி மன்னர் அப்துல்லா காலமானதால், தனது இந்திய சுற்றுப் பயணத்தை ஓபாமா சுருக்கிக் கொண்டதாகத் தெரிகிறது.
27ஆம் தேதி தாஜ்மகாலை பார்வையிடுவது உள்ளிட்ட பல்வேறு தனிப்பட்ட நிகழ்ச்சிகளை அவர் ரத்து செய்துள்ளார். மாறாக, சவுதி மன்னரின் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக 27ஆம் தேதி அவர் டெல்லியில் இருந்து புறப்பட்டு நேராக சவுதி அரேபியாவுக்கு செல்லவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.