இம்பால், ஜனவரி 25 – தற்கொலைக்கு முயன்றதாகக் கூறி கைது செய்யப்பட்ட மணிப்பூரின் ஐரோம் ஷர்மிளா (படம்) 22ஆம் தேதி இரவு விடுதலை செய்யப்பட்டார். எனினும் அவர் மீண்டும் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கி உள்ளார்.
மணிப்பூர் மாநிலத்தில் நீண்ட காலமாக ராணுவப்படைக்கான சிறப்பு அதிகார சட்டம் அமலில் உள்ளது. இச்சட்டத்தை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என்ற கோரிக்கையுடன் கடந்த 2000ஆம் ஆண்டு முதல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார் ஐரோம் ஷர்மிளா.
இதன் காரணமாக மணிப்பூரின் இரும்புப்பெண் என்று அவர் அழைக்கப்படுகிறார்.
இந்நிலையில் உண்ணாவிரதம் இருந்ததற்காக தற்கொலை முயற்சி குற்றப் பிரிவு சட்டத்தின்கீழ் அவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் வியாழக்கிழமை இரவு விடுதலை ஐசெய்யப்பட்டார்.
ஷர்மிளா தற்கொலைக்கு முயன்றதாக கூறப்பட்ட குற்றச்சாட்டை இம்பால் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதையடுத்து 14 ஆண்டுகளுக்கு பின் அவர் கடந்த ஆண்டு விடுதலை செய்யப்பட்டார்.
எனினும், விடுதலையானவுடன் அவர் தனது உண்ணாவிரதத்தை தொடர முயற்சித்ததால், போலீசார் மீண்டும் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்கொலைக்கு முயன்றதாக கூறப்பட்ட குற்றச்சாட்டை ஏற்க நீதிமன்றம் மீண்டும் மறுத்துவிட்டதுடன், ஐரோம் ஷர்மிளா மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் தள்ளுபடி செய்த நீதிபதி அவரை விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.
விடுதலை செய்யப்பட்ட பின்னரும் மன உறுதி சற்றும் குலையாத ஷர்மிளா, இம்பால் நகரின் மையப்பகுதியில் மீண்டும் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை துவங்கி உள்ளார். மருத்துவர் குழுவினர் அவரைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.