சிட்னி, ஜனவரி 29 – இந்தோனேசியாவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு, 8 கிலோ ஹெராயின் போதைப்பொருளை கடத்த முயன்றதாக, மையூரன் சுகுமாரன், ஆன்ட்ரூசன் என்ற இரண்டு ஆஸ்திரேலியர்கள் கடந்த 2005-ஆம் ஆண்டு, பாலி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர்.
அவர்களுக்கு இந்தோனேசிய நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இந்தோனேசியாவின் புதிய அதிபராக ஜோகோ விடோடோ பொறுப்பேற்ற பிறகும் அங்கு போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு தொடர்ந்து மரண தண்டனை விதிக்கப்பட்டு வருகின்றது.
இந்த மாதத்தில் பிரேசில் மற்றும் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த 2 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்த நிலையில், கைது செய்யப்பட்ட ஆஸ்திரேலியர்களுக்கு ஆதரவாக அந்நாட்டு பிரதமர் டோனி அப்போட், இந்தோனேசிய அரசிற்கு கோரிக்கை ஒன்றை வைத்திருந்தார்.
அதில், “எங்கள் நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு இருப்பதை இந்தோனேசிய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்று கூறியிருந்தார்.
எனினும், அப்போட்டின் இந்த கோரிக்கையை இந்தோனேசிய அதிபர் விடோடோ திட்டவட்டமாக நிராகரித்துவிட்டார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“இந்தோனேசியாவில் போதைப்பழக்கத்தின் காரணமாக ஆண்டுக்கு 18 ஆயிரம் பேர் உயிரிழக்கின்றனர். எனவே, போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் சமரசம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படமாட்டாது” என்று அவர் தெரிவித்துள்ளார்.