கோலாலம்பூர், ஜனவரி 29 – கட்சியில் நிலவி வரும் பிரச்சனைகளுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்குடன் கலந்து பேசி தீர்வு காண, கொடுக்கப்பட்ட காலக்கெடுவை தான் ஏற்றுக் கொள்வதாக மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பழனிவேல் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேசிய முன்னணியின் தலைவரான பிரதமரிடம் இந்த பிரச்சனை குறித்து கலந்தாலோசித்து தீர்வு காணும் காலக்கெடுவிற்கு நான் ஒப்புக் கொள்கின்றேன். கட்சியில் நிலைமை மேலும் மோசமடையாமல் இருக்க நானும், துணைத்தலைவர் சுப்ரமணியமும் எங்கள் நிலையில் இருந்து இறங்கி வந்து, இந்த பிரச்சனைக்குத் தீர்வு காண ஒப்புக்கொண்டுள்ளோம். எந்த நெருக்கடியும் இல்லாமல் ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் மஇகா பிரச்சனைகள் தீர்க்கப்படும். அடுத்தகட்ட நடவடிக்கைகள் எல்லாருக்கும் திருப்தியளிக்கும் வகையில் இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
நேற்று முன்தினம், கூட்டரசுப் பிரதேச மஇகா தலைவர் பதவியில் இருந்து டத்தோ சரவணனை நீக்குவதாக பழனிவேல் அறிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, நேற்று மதியம் மஇகா தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், “24 மணி நேரத்திற்குள் பழனிவேல் கூட்டத்தைக் கூட்ட வேண்டும். இல்லையேல் அவரது வீட்டின் முன்பு கூடுவோம். தற்போது அனைத்தும் கட்டுப்பாட்டை மீறி நடந்து கொண்டிருக்கின்றன. மஇகா வரலாற்றில் இப்படியொரு இக்கட்டான, பிரச்சினைக்குரிய சூழல் ஏற்பட்டதில்லை” என்று பழனிவேலுக்கு காலக்கெடு விதித்தார்.