நியூயார்க், ஜனவரி 30 – எதிர்காலத்தில் உருவாக இருக்கும் ‘இயந்திர மனிதன்’ (Robot) குறித்த தனது கவலையை மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் சமூக வலை தளம் ஒன்றில் பதிவு செய்துள்ளார்.
‘ரெடிடிட்’ (Reddit) சமூக வலை தளத்தில் Ask Me Anything என்ற நிகழ்வில், பயனர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்துள்ள பில் கேட்ஸ், எதிர்காலத்தில் உருவாக இருக்கும் இயந்திர மனிதன் பற்றியும், ‘செயற்கை நுண்ணறிவு’ (Artificial Intelligence) பற்றியும் தனது கருத்துக்களை பதிவு செய்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:- “மனிதர்கள் தற்போது செய்து கொண்டிருக்கும் பல்வேறு பணிகளை விரைவில் ரோபோக்களே செய்ய விருக்கின்றன. அடுத்தடுத்த ஆண்டுகளில், உருவாக இருக்கும் ரோபோக்கள் திறன் வாய்ந்தவையாக இருக்கும்.”
“முன்பை விட அடுத்த 30 ஆண்டுகளில், ரோபோக்களின் வரவு அதிகரிக்கக்கூடும். இயந்திரங்கள் சாதாரண வேலைகளான பழங்களை எடுத்தல், மருத்துவமனையில் நோயாளிகளை இடமாற்றுதல் போன்றவற்றை எளிதில் செய்து முடிக்கும் வகையில் உருவாக்கப்பட இருக்கின்றன”.
“இந்த நிலையில், இயந்திரங்களை தன்னிச்சையாக செயல்பட ஆரம்பித்தால், அவை தனது அடுத்த கட்ட நகர்தலை அதி விரைவாக எடுத்து வைக்கும்.”
“இயந்திரங்களுக்கு செயற்கை நுண்ணறிவு கொடுக்க நான் எப்போதும் விரும்புவதில்லை. அது தொடர்பான கண்டுபிடிப்புகள் கவலை அளிப்பதாக இருக்கின்றன”.
“இயந்திரங்களுக்கு செயற்கை நுண்ணறிவு கொடுக்காத வரை அவை நமக்கு தேவையான எண்ணற்ற வேலைகளை நமக்காக செய்து கொடுக்கும். செயற்கை நுண்ணறிவை அவை பெற்று விட்டால், விளைவுகள் எதிர்பார்க்காதவையாக இருக்கும்” என்று அவர் கூறியுள்ளார்.
“கடந்த சில மாதங்களுக்கு முன்பு, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி எலான் மஸ்க் ரோபோக்களுக்கான செயற்கை நுண்ணறிவு பற்றிய கேள்விகளுக்கு பதில் அளிக்கையில்,
“சமீப காலமாக ரோபோக்களுக்கு செயற்கை நுண்ணறிவை வழங்க விஞ்ஞானிகள் கடும் முயற்சிகளை எடுத்து வருகின்றனர். இதனால் ஏற்பட இருக்கும் பின்விளைவுகள் பற்றி அவர்கள் கவலை கொள்வதில்லை.”
“தொடர்ச்சியான முயற்சிகளினால் ரோபோக்களுக்கு செயற்கை நுண்ணறிவை வழங்கும் முறை சாத்தியமாகும். அந்த நாள் மனித குலத்தின் அழிவிற்கு ஆரம்பமாக இருக்கும். அதன் விளைவுகள் அணு ஆயுதத்தை விட கொடுமையானதாக இருக்கும்” என்று கூறியிருந்தார்.
எலான் மஸ்க் கூறிய கருத்துக்களை ஒப்புக்கொண்டுள்ள பில் கேட்ஸ், இது தொடர்பாக சில விஞ்ஞானிகள் ஏன் கவலை கொள்வதில்லை என்று கேள்வி எழுப்பி உள்ளார்.