லண்டன், ஜனவரி 30 – விண்வெளி ஆராய்ச்சிக்காக அனுப்பப்பட்ட நாசாவின் கெப்லர் விண்கலம், விண்வெளியில் 5 கிரகங்களுடன் புதிய சூரிய மண்டலம் ஒன்று இருப்பதற்கான சான்றுகளை அனுப்பி உள்ளது.
விண்வெளி ஆராய்ச்சியில் உச்சம் தொட்டிருக்கும் நாசா, புதிய கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் பற்றி தொடர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றது.
இதற்காக, நாசா மையம் விண்வெளிக்கு அனுப்பிய கெப்லர் விண்கலம், அதி நவீன டெலஸ்கோப் உதவியுடன் புதிய கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களை ஆராய்ந்து, அவை இருப்பதற்கான சாத்தியக் கூறுகளை பூமிக்கு அனுப்பி வைக்கிறது.
இந்நிலையில், கெப்லர் சமீபத்தில் அனுப்பி உள்ள சான்றுகளை ஆராய்ந்த விஞ்ஞானிகள், தொன்மைவாய்ந்த சூரிய மண்டலம் ஒன்று விண்வெளியில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக பர்மிங்காம் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், “ஒரு நட்சத்திரத்தை, பூமிக்கு சமமான 5 கிரகங்கள் சுற்றி வருவதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.”
“அவை பூமியில் இருந்து சுமார் 117 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கின்றன. குறிப்பிட்ட அந்த புதிய நட்சத்திரத்திற்கு கெப்லர் 444 என பெயரிட்டுள்ளது. அவை ஏறத்தாழ 11.2 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதாக இருக்கலாம்” என்று தெரிவித்துள்ளனர்.