வாஷிங்டன் : சனிக்கிழமை (மே 8) இரவு சீனா வானில் பாய்ச்சிய விண்கலம் (ராக்கெட்) ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மாலைத் தீவு அருகே இந்து மாக்கடலில் விழுந்தது. விண்கலத்தில் சிதறல்கள் கடல் பகுதியில் விழுந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பில் சீனா, முறையான தர நிர்ணயக் கட்டுப்பாடுகளைப் பின்பற்றுவதில்லை என அமெரிக்காவின் வான்வெளி ஆராய்ச்சி மையமான நாசா கண்டனம் தெரிவித்தது.
விண்கலத்தை ஏவும் நாடுகள் அந்த விண்கலங்கள் திசை மாறி மீண்டும் பூமிப் பகுதிக்குள் வரும்போது அதற்கான முறையான, வெளிப்படைத் தன்மையான நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்றும், பொதுமக்களுக்கும் பூமியில் உள்ள உடமைகள் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யவேண்டும் என்றும் நாசா தெரிவித்தது.
லோங் மார்ச் 5பி (Long March 5B) என்ற பெயர் கொண்ட அந்த விண்கலம் மீண்டும் பூமிப் பாதைக்குள் திரும்பும்போது தீப்பிடித்து எரிந்து இந்து மாக்கடலில் விழுந்தது. எனினும் மாலைத் தீவுப் பகுதிகள் எதற்காவது பாதிப்பு ஏற்பட்டதாக என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
108 அடி உயரம் கொண்ட அந்த விண்கலம் சுமார் 40 ஆயிரம் பவுண்டுகள் எடை கொண்டதாகும்.
இந்த விண்கலத்தை கடந்த ஏப்ரல் 29-ஆம் தேதி சீனா வான்வெளியில் பாய்ச்சியது. அதன் எரிபொருள் தீர்ந்த பின்னர் அது தானாகவே தீப்பிடித்து விழுந்திருக்கிறது.
இதன் தொடர்பில்தான் சீனா முறையான நடைமுறைகளைப் பின்பற்றுவதில்லை என நாசா கடுமையாகச் சாடியிருக்கிறது.