அம்மான், ஜனவரி 30 – ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் பிணைக் கைதிகளாக்கப்பட்டுள்ள ஜப்பானைச் சேர்ந்த கெஞ்சி கோடோவையும், தங்கள் நாட்டு விமானியான மாஷ்–அல்–கசாபேயையும் மீட்க, பெண் தீவிரவாதியான சஜிதாவை விடுதலை செய்ய ஜோர்டான் அரசு சம்மதம் தெரிவித்துள்ளது.
சிரியாவில் தங்கியிருந்த ஜப்பானியர்களான ஹருணா யுகாவா, கெஞ்சி கோடோ ஆகியோரை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கடந்த வாரம் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்தனர்.
அவர்களை விடுவிக்க ஜப்பான் அரசு மூன்று நாட்களுக்குள் 200 மில்லியன் டாலர்கள் கொடுக்க வேண்டும் என நிர்பந்தம் செய்தனர். ஜப்பான் அரசு அதற்கு உடன் படாததால், ஹருணா யுகாவா தீவிரவாதிகளால் கொல்லப்பட்டார்.
இந்த நிலையில் ஐப்பானின் மற்றொரு பிணைக் கைதி கெஞ்சி கோடோவையும், தீவிரவாதிகளால் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள, ஜோர்டானிய விமானி மாஷ்–அல்–கசாபேயையும் விடுவிக்க,
ஜோர்டான் சிறையில் மரண தண்டனை கைதியாக இருக்கும் ஐஎஸ்ஐஎஸ் பெண் தீவிரவாதியான சஜிதா அல்– ரிஷாவியை 24 மணி நேரத்திற்குள் விடுதலை செய்ய வேண்டும் என்று கெடு விதித்தனர்.
அதனைத் தொடர்ந்து தீவிரவாதி சஜிதாவை விடுதலை செய்ய ஜோர்டான் அரசு சம்மதம் தெரிவித்துள்ளது. எனினும், ஜோர்டான் அரசு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளிடம் முக்கிய நிபந்தனை ஒன்றை முன் வைத்துள்ளது.
அதில் விமானி மாஷ் அல் கசாபே எவ்வித துன்புறுத்தலுமின்றி தங்களிடம் ஒப்படைத்தால், சஜிதாவை விடுதலை செய்வதாக தெரிவித்துள்ளது.
இதனை தீவிரவாதிகள் ஏற்பார்களா? கெஞ்சி கோடோ உயிருடன் இருப்பதாக கூறி அவர்கள் வெளியிட்டுள்ள அவரின் குரல் பதிவு உண்மைதானா என்பது இன்று தெரிய வரும்.