Home கலை உலகம் திரைவிமர்சனம்: இசை – இருக்கு… ஆனா வேற மாதிரி இருக்கு…

திரைவிமர்சனம்: இசை – இருக்கு… ஆனா வேற மாதிரி இருக்கு…

1098
0
SHARE
Ad

Isai-Movie-Review-Ratingஜனவரி 30 – ரசிகர்களுக்கு திரையரங்கு அனுபவம் என்பதை எல்லா படங்களும் கொடுத்து விட முடியாது. படத்தில் வசனமே புரியாவிட்டாலும் கூட, ஹாலிவுட் படங்களை ஏன் திரையரங்கில் பார்ப்பதை மக்கள் விரும்புகிறார்கள் தெரியுமா? அவை உருவாக்கப்படும் விதம்.

வித்தியாசமான திரைக்கதை, பிரம்மாண்டமான காட்சியமைப்பு, அதிரும் பின்னணி இசை, அட்டகாசமான ஒளிப்பதிவு, மிரட்டும் கிராபிக்ஸ் இப்படி ஏதாவது ஒரு சிறப்பையோ அல்லது ஒட்டுமொத்தமாகவோ ஹாலிவுட் படங்கள் கொண்டிருப்பதால் தான் மக்களுக்கு திரையரங்கு அனுபவம் கிடைக்கிறது.

2009-ம் ஆண்டு வெளிவந்த பிரிட்டிஷ் படமான ‘Triangle’ -ல் கதைக்குள் கதை… கதைக்குள் கதை என்று நம்மை சுற்றலில் விடுவார்கள். இருந்தாலும், படம் முடியும் வரை நம்மால் வேறு எங்கும் நகர முடியாத அளவிற்கு காட்சிகளில் விறுவிறுப்பு இருக்கும்.

#TamilSchoolmychoice

அப்படி ஒரு திரையரங்கு அனுபவத்தை, சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் எஸ்ஜே சூர்யா இயக்கி, நடித்து, இசையமைத்திருக்கும் ‘இசை’ படம் கொடுக்கிறது. அது எந்த விதத்தில் என்றால், வித்தியாசமான திருப்பங்கள் நிறைந்த பின்பாதி திரைக்கதையில். அப்போ முன்பாதி? என்று நீங்கள் இழுப்பது புரிகிறது…. முன்பாதி வழக்கமான எஸ்ஜே சூர்யா கிளுகிளுப்பு சமாச்சாரங்கள் தான்.

இந்த படம், கடும் குளிரில் சுடச்சுட காபி குடிப்பதைப் போல…. கொஞ்சம் தாமதித்தால் ஆறிவிடும். இன்னும் இரண்டு நாட்கள் தாமதித்தால் இணையம் முழுவதும் கதையின் திருப்பம் வெளியாகி அந்த திரை அனுபவத்தை பெற இயலாமல் போய்விடும். ஒருவேளை படத்தின் கதை பற்றிய விசயங்கள் உங்கள் காதிலோ, கண்ணிலோ படாமல் இருந்தால் தப்பிக்கலாம்.

இவ்வளவு பில்டப்களை கொடுத்த பின்பு, நாம் வழக்கமாகக் கூறும் கதைச் சுருக்கம் கூட இந்த விமர்சனத்திற்கு தேவையில்லை.

ரசித்தவை

34-599x350

டைட்டில் கார்டு போடுவதற்கு முன் “புகைப்பிடித்தல் உடல்நலத்திற்கு கேடு…” என்று அந்த பரீட்சயமான கரகர குரல் வாசிக்கும் போதே நம்முள் உற்சாகம் தொற்றிக் கொள்கிறது.

கபில்தேவ், சச்சின், இளையராஜா, ஏஆர் ரஹ்மான் என்று டைட்டிலிலும் பல வெற்றியாளர்களை காட்டி, இறுதியாக ‘பொறாமை’ உயிரைக் கொல்லும் என்ற அறிவுரையுடன் கதைக்குள் நம்மை அழைத்துச் செல்கிறார் எஸ்ஜே சூர்யா.

சௌந்தராஜனின் ஒளிப்பதிவில் படத்தில் எல்லாமே துடைத்து வைத்தது போல் அவ்வளவு புதிதாக, சுத்தமாக இருக்கிறது. ஏ.கே.சிவா (எஸ்ஜே சூர்யா) கதாப்பாத்திரம் பயன்படுத்தும் ஸ்டூடியோ, வீடு, கார் என்று ஒவ்வொன்றும் அவ்வளவு அழகு.

உச்சத்தில் இருக்கும் ஒரு கலைஞனின் குணாதிசயங்கள் எப்படி இருக்கும்…. அவன் எதை ரசித்து தனது படைப்பை உருவாக்குகிறான்…. தூங்கும் போது, காரில் போகும் போது கூட அவனது சிந்தனைகள் படைப்பைப் பற்றியதாகவே இருக்கும் போன்ற விசயங்களை அவ்வளவு அற்புதமாக காட்சிகளாக்கியிருக்கிறார் எஸ்ஜே சூர்யா.

இப்படித்தான் கதை என்று படம் பார்ப்பவர்கள் யூகித்துக் கொண்டிருக்கும் போதே அடுத்தடுத்த திடீர் திருப்பங்கள் நம்மை இருக்கையின் நுனிக்கு கொண்டு வந்தாலும், திரைக்கதை குழப்பவில்லை.

கதாநாயகனின் மனநிலையை பாதிப்பிற்குள்ளாக்க தமிழ் சினிமாவில் வில்லன்கள் செய்யும் அதே வித்தை இந்தப் படத்திலும் பயன்படுத்தப்பட்டிருந்தாலும், டிரைவர் ஓடிப் போகும் காட்சிக்கும், பேக் காணாமல் போகும் காட்சிக்கும், லில்லி தாவிக் குதிக்கும் காட்சிக்கும் இயக்குநருக்கு சபாஷ் சொல்லியே ஆக வேண்டும். மிரட்டுகிறது…

இயக்குநரின் புத்திசாலித்தனமான கதை சொல்லும் திறமையால், ரசிகர்கள் கண்டுபிடிக்கும் லாஜிக் குறைகளையெல்லாம் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் வைத்திருக்கும் ஒற்றை வசனம் ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடுகிறது.

இன்னும் 20 வருசமானாலும் சத்தியராஜால் எல்லாவிதமான கதாப்பாத்திரங்களிலும் நடிக்க முடியும். சின்ன அளவில் கூட அவர் முகத்தில் சுருக்கமோ, உடலில் தளர்ச்சியோ இல்லை…. மனிதர் என்ன சாப்பிடுகிறாரோ அவ்வளவு இளமை…

நடிப்பு:

Isai movie latest poster

எஸ்ஜே சூர்யாவா …. சத்யராஜா என்று நடிப்பில் போட்டி ஏற்படும் அளவிற்கு இருவரின் நடிப்பும் அவ்வளவு அற்புதம். குருவி எச்சம், வண்டுகளின் சத்தம் என இசையை தேடித் திரிவதாகட்டும், “டீயும் ரெண்டு பிஸ்கட்டும் வாங்கிட்டு வா” என்று உதவியாளரிடம் உரக்க கத்துவதாகட்டும், “பாப்பா… நீயா தான் டா உன்ன காப்பாத்திக்கணும்” என்று கண்ணீர் விடுவதாகட்டும் எஸ்ஜே சூர்யாவின் நடிப்பு ஈர்க்கிறது.

சத்தியராஜ் பேசும் ஒவ்வொரு வசனத்திற்கும் திரையரங்கில் கைதட்டல்கள் அள்ளுகிறது.

“டே எங்கிட்ட நெறைய பணம் இருந்தாலும் ஓசில சோறு திங்கிற மாறியே இருக்கு… ஏன் தெரியுமா? வேலை இல்லை”, “ஏம்மா சரசு (கடவுள் சரஸ்வதியின் படத்தை பார்த்து)…. என் விரல்ல தான இருந்த இப்ப அவன் விரலுக்கு தாவிட்டியா?”

“நெறைய ஹிட்டுப் படம் குடுத்த டேரக்டரு கூட … என் முன்னால செவத்துல ஒட்டுன பல்லி மாரியே பவ்யமா வருவான்” என சிரிப்பும், மிரட்டலுமாக சத்தியராஜ் ஒவ்வொரு காட்சியிலும் ரசிக்க வைக்கிறார்.

படத்தில் இன்னொரு முக்கியமான கதாப்பாத்திரம் கஞ்சா கருப்பு…. அநேகமாக, கஞ்சா கருப்பு தனது ரசிகர்களை அதிகமாக சிரிக்க வைத்த படம் இதுவாகத் தான் இருக்கும். சத்தியராஜ் வீட்டு வேலைக்காரனாக இருந்து கொண்டு எக்குத்தப்பாக எதையாவது செய்வதும், அடிவாங்குவதுமாக நடிப்பாலும், உடல்மொழியாலும் கவர்ந்து சினிமாவில் அடுத்த ரவுண்டுக்குத் தயாராகிவிட்டார்.

கதாநாயகி சுலக்னா…. தொடக்க காட்சிகளில் நடிப்பில் லேசான செயற்கைத் தனங்கள் தெரிந்தாலும் பின்பாதி காட்சிகளில் நடிப்பில் பிரமாதப்படுத்திவிட்டார். 4 வருட காலம் படப்பிடிப்பு நடைபெற்றதாலோ என்னவோ  நடிப்பில் நன்றாக தேறி பட்டமே வாங்கிவிட்டது போல் கிளைமேக்ஸ் காட்சிகளில் தோன்றுகிறார்.

இது தவிர தம்பி ராமையா, இயக்குநர் விஷ்ணு வர்த்தன், ராஜூ சுந்தரம் என ஆங்காங்கே தெரிந்த முகங்கள் வந்து போகிறார்கள்.

‘அன்பே ஆருயிரே’ நடிகை நிலாவை கல்யாணமே பண்ணிக்கிட்டீங்களா எஸ்ஜே சூர்யா சார்? சொல்லவே இல்ல…..

தொப்புளை மட்டும் ஏறக்குறைய 20 நிமிடங்கள்

Isai-Stills120614a581

கதாநாயகியின் தொப்புளுக்கு மட்டும் அவ்வளவு க்ளோசப் வைத்து ஏறக்குறைய 20 நிமிடக் காட்சிகள் தேவையா என்று இயக்குநரை கேட்கத் தோன்றுகிறது.

இதயம் குதிக்குதா? என காதல் காட்சிகள் போல் வசனங்கள் இருந்தாலும், இரட்டை அர்த்தத்தோடு இருப்பதுடன் காட்சிகளில் காமம் சற்று தூக்கலாகத் தான் இருக்கின்றது.

4 வருடம் இசை கற்று, படத்தின் பின்னணி இசையில் வெளுத்து வாங்கியிருக்கும் எஸ்ஜே சூர்யா, பாடல்களில் பெரிதாக ஈர்க்கவில்லை. “புத்தாண்டின் முதல் நாளிது” பாடல் கேட்கும் ரகம் என்றாலும் சங்கர் மகாதேவன் போன்று ஹைபிட்சில் பாடும் வேறு பாடகர்கள் யாராவது பாடியிருக்கலாம் என தோன்றுகிறது. அவ்வளவு கஷ்டப்பட்டு எஸ்ஜே சூர்யாவே பாடியிருக்கத் தேவையில்லை.

மற்றபடி, மலை உச்சியில்… அருவி அருகே வீடு, தேவாலயம், விரல் விட்டு எண்ணும் வீடுகளைக் கொண்ட கிராமம் ஆகியவற்றின் வடிவமைப்பு கண்களுக்கு விருந்து.

மொத்தத்தில்… இசை – இருக்கு… ஆனா வேற மாதிரி இருக்கு…..

– ஃபீனிக்ஸ்தாசன்