கோலாலம்பூர், ஜனவரி 31 – (நமது நாட்டின் மூத்த எழுத்தாளரும், சமூகப் போராட்டவாதியுமான, அரசியல் ஆய்வாளருமான பெரு.அ.தமிழ்மணி , மஇகாவில் தொடர்ந்து கொண்டிருக்கும் கட்சி உட்பூசல்கள் குறித்து தமது கருத்துகளை பதிவு செய்துள்ள கட்டுரை இது. தமிழ்மணி, மலேசியத் தமிழர் தன்மான இயக்கத்தின் தேசியத் தலைவருமாவார்)
பெரு.அ.தமிழ்மணி
“மலேசிய இந்தியர்களின் அரசியல் வாழ்வுரிமைக்காகப் போராடும் அனைத்து அரசியல் கட்சிகளும் எந்த திசைகளிலிருந்தும் விலகிச் சென்றிடக் கூடாது என்று மலேசியத் தமிழர் தன்மான இயக்கம் மிகவும் பணிவான வேண்டுகோளை முன் வைக்கிறது.
அவ்வியக்கத்தின் மத்திய செயலவைக் கூட்டத்தில் இந்தியர்களின் அரசியல் நிலைப்பாடு பற்றி தீர்க்கமாக விவாதித்த போது அரசியலில் நமது அரசியல் கட்சிகளால் பெருமளவு இந்திய சமுதாயம் சிதறடிக்கப்பட்டு வருவதைக் கணக்கிட முடிகிறது.
அரசியல் கட்சிகள் நடத்துபவர்கள் யாரும் தங்களுக்குள் நடைபெறும் சண்டையென்றும், பிணக்கு என்றும் மோதல் என்றும் ஒரு வட்டத்தை போட்டுக் கொண்டு சுழன்று வர முடியாது. காரணம், பொதுத் தேர்தலில் பல்லின மக்களின் ஆதரவைப் பெற வேண்டிய நிலை ஒருபுறம் இருந்தாலும் அதிலும் குறிப்பாக-
இந்திய சமுதாயத்தின் வாக்குகளைப் பெற வேண்டிய அவசியத்திற்கு இயல்பாக முன் தள்ளப்பட்டிருப்பதால், சண்டைகளைச் சச்சரவுகளை அரசியல் கட்சிகளின் வட்டத்திற்குரியது என்று சொல்லி யாரும் தொடர்ந்து வட்டமடித்துக் கொண்டு வரமுடியாது.
மோதுவது இயல்புதான்!
அரசியலில் பதவிக்காக மோதுவது ஒவ்வொருவரின் தனிப்பட்ட உரிமை என்றாலும், தங்களுக்குரிய நாற்காலிகளை நோக்கி நகர வேண்டிய நிர்ப்பந்தமும் தேவையென்று கருதினாலும் அதற்காகக் கட்சியை சீர் குலைப்பதும், அதன் உறுப்பினர்களை சிதறடிப்பதும், ஒட்டு மொத்தமாக இந்திய சமுதாயத்தின் அவநம்பிக்கையைப் பெறுவதுமான நிலைப்பாட்டில் யாருக்கும் எந்த நபருக்கும் பயணம் செய்ய உரிமை கிடையாது.
மஇகாவில் ஓட்டை!
மலேசிய இந்தியர்களின் நூறு ஆண்டுகால அரசியல் பயணத்தில் மஇகாவுக்கு தனியொரு மதிப்பீடு உண்டு. அதில் 68 ஆண்டுகள் அக்கட்சிக்குரிய நெடிய காலக் கணக்கில், அக்கட்சி 2008ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலுக்குப் பிறகு, மிகவும் பலவீனமாக அதனுடைய கட்டமைப்பு அமைந்துவிட்டது. அதாவது தனக்குத் தானே ஓட்டையைப் போட்டுக் கொண்டுள்ளது.
இங்கு பலவீனம் என்று குறிப்பிடப்படுவது, பொதுத் தேர்தலில் 9 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 7 பேரை இழந்துவிட்டது. 2008இல் தான் இந்த நிலை என்றால் 2013இல் எதிர் நோக்கிய பொதுத் தேர்தலிலும் அதே 9 நாடாளுமன்றத் தொகுதிகளில் 6 தொகுதிகளை இழக்க வேண்டியதாயிற்று.
அதுவும் கேமரன்மலையில் பெரும் தடுமாற்றத்துடன் மோதி அத்தொகுதியை தக்கவைத்துக் கொள்ள வேண்டியதாயிற்று. இதே போன்ற நிலைப்பாட்டில்தான் சிலாங்கூர், பினாங்கு, கெடா, பகாங் போன்ற மாநிலங்களில் ஒரு சட்டமன்றத் தொகுதியைக்கூட தக்கவைத்துக் கொள்ள முடியாத அபாயகரமான சூழ்நிலைக்கு கட்சி பெரும் பின்னடைவுக்கு தள்ளப்பட்டு விட்டது.
வாக்காளர் நிலை என்ன?
ஓர் அரசியல் கட்சியின் உயிர் மக்கள் என்பதும் அதுவும் மக்களோடு மக்களாகக் கலந்து உறவாடி, மக்களின் உணர்வுகளையும் அவர்கள் எதிர்நோக்கும் உண்மையான இழப்புகளையும் கண்காணித்து அதற்குரிய தீர்வுகளுக்காக அரசியலில் காயை நகர்த்த வேண்டிய பொறுப்பு உண்டு.
அதாவது இதில் ஆளுங்கட்சியா, எதிர்க்கட்சியா, எந்தக் களமாக இருந்தாலும் அந்தக் களத்தில் நிற்க வைக்க வேண்டிய மிகப் பெரிய ஜனநாயகப் பார்வை மக்களுக்குத்தான் உண்டு.
எனவே, அரசியல் கட்சிகள் வெறும் வெற்று அறிக்கைகளிலும் வீண் விவாதங்களிலும், அர்த்தமற்ற சர்ச்சைகளிலும் பெருமளவு பெயர் பெற்றிட முடியாது. ஆர்ப்பரிப்பு, ஆர்ப்பாட்டம் அரசியலில் ஓளரவு களம் போலத் தெரிந்தாலும் அதற்கும் மேலாக மக்களின் நம்பிக்கையைப் பெறுவது ஒன்றே தொடர் அரசியலுக்கு அடித்தளமாக இருக்க முடியும்.
யார் பொறுப்பு? யார் குற்றவாளி?
அண்மைய காலமாக மஇகாவில் ஏற்பட்டுள்ள விரிசலுக்கு யார் காரணம் என்பதற்குரிய சர்ச்சை தீர்ந்தபாடில்லை. ஒரு தலைமைத்துவம் சரியான குறிக்கோளை தவற விடுமேயானால், பெரும் தடுமாற்றத்தால் நிலைகுலையவே செய்யும்.
ஒருவர் மீது மற்றொருவர் சாட்டுகின்ற குற்றச்சாட்டுகளுக்கு அணி பிரிந்தாலும் அத்தனை அரசியல் விளையாட்டாளர்களும் ஒவ்வொரு நியாயத்தை தங்களுக்குள் புதைத்துக் கொண்ட இருப்பார்கள்.
அதற்குரிய தீர்வும், தீர்ப்பும், நியாயமும், சரியான கட்டமைப்புக்குக் கொண்டு வருவது அவ்வளவு எளிதான காரியமே அல்ல!
பலகட்சிகள் உருவாக்கம்!
அதனால் இன்றைக்கு பல குழப்பங்களை எதிர்நோக்கியிருக்கும் மஇகா ஏற்கனவே ஏற்பட்ட குழப்பங்களாலும், பிளவுகளாலும் பல்வேறு கட்சிகள் உருவெடுத்துள்ளதை எண்ணிப் பார்ப்பது நல்லது.
பிபிபி கட்சி பெரும் ஆளுமைக்குரிய கட்சியாக டி. ஆர் – எஸ். பி. சீனிவாசகம் சகோதரர்கள் காலத்தில் இருந்தாலும், அக்கட்சி அவர்கள் மறைவுக்குப் பிறகு மிகவும் பலவீனமாக இருந்த சூழ்நிலையில்,
அதன்பின் டான்ஸ்ரீ கேவியஸ் தலைமையில் பெருமளவு ஏற்றம் பெற, மஇகாவின் பலவீனமே காரணமாக அமைந்தது.
மஇகாவிலிருந்து ஓரங்கட்டப்பட்ட உறுப்பினர்கள் பிபிபி கட்சியில் சேர்ந்தார்கள். அது போன்றே ஐபிஎப்பும் உருவெடுத்தது.
கே.எஸ்.நல்லாவுக்கு ஏற்பட்ட பல்வேறு தேவைகளுக்காக ம.இ.ஐ. கட்சி உருவெடுத்தது.
ஹிண்ட்ராப்பின் வெளிப்பாட்டால் ஆர்.எஸ். தனேந்திரன் தலைமையில் மக்கள் சக்தி உருவெடுத்தது. தற்போது டத்தோஸ்ரீ கிருஷ்ணா, தலைமையில் மலேசிய இந்தியர் கட்சி கட்சி உருவெடுத்துள்ளது.
இவற்றிற்கிடையே, ஏற்கனவே உருவெடுத்த கிம்மா, இந்திய முஸ்லீம் சமுதாயத்தை தனியாகப் பிரித்து தனித்துவமான ஓர் அரசியல் அடையாளத்தை முன்னிறுத்தியுள்ளது.
இப்படி இந்திய சமுதாயத்தின் பல்வேறு கூறுகளுக்கு – கூற்றுகளுக்கு – குறைகளுக்கு -குற்றங்களுக்கு மஇகாவே பெருங்காரணம் என்கிற பலமான, பரவலான கருத்துக்களுக்கிடையே, மேலும் மஇகா பலவீனம் அடைய வேண்டுமா? என்பது குறித்து அதன் தலைமை எண்ணிப் பார்ப்பது நல்லது.
எதிர்க் கட்சியில் நமது நிலைபாடு!
இவற்றிற்கிடையில் எதிர்க்கட்சியில் நமது நிலைபாடு என்ன என்பதைப் பற்றியும் சிந்திக்க வேண்டும். பொதுத் தேர்தலில் தேசிய முன்னணிக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட இந்திய வாக்குகள் எதிர்க்கட்சிகளுக்கு கணிசமான வெற்றியை அடைய வழி வகுத்திருந்தாலும், அதனால் பெருமளவு இந்திய வேட்பாளர்கள் நாடாளுமன்றத்திற்கோ, சட்டமன்றத்திற்கோ வருவதில்லை, நுழைவதில்லை.
அதற்குக் காரணம், இந்தியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடிப்படை இன விகிதாச்சார நுழைவுதான்! அதனால் எதிர்க்கட்சிகளின் அரசியலில் 10-12 உறுப்பினர்களுக்கு மேல் நாடாளுமன்றத்தில் நுழைய முடியாத நிலை!
அதே போன்றுதான் எல்லா மாநில சட்டமன்றங்களிலும் மொத்தமாக, சுத்தமாக 15 ~பேருக்கு மேல் நுழைய முடியாத சூழ்நிலை உருவெடுத்துள்ளது.
ஆனால் ஆளும் தேசிய முன்னணியை ஆதரிக்கிற இந்திய கட்சிகளால் பெருமளவு இந்திய வாக்காளர்களை கடந்த இரண்டு தேர்தல்களிலும் ஈர்க்கமுடியாத காரணத்தால் அவ்வாக்குகள் பெருமளவு எதிர்க்கட்சிகளின் சீன, மலாய் வேட்பாளர்களின் வெற்றிக்கு உதவியிருக்கிறது.
தேசிய அரசியலில் விபத்துகள்!
தேசிய அரசியலில் இதுபோன்ற அரசியல் விபத்துக்களைத் தவிர்க்க முடியாது என்றாலும், நாம் எங்கே இருக்கிறோம்! எங்கேதான் போகப் போகிறோம்! என்பதைப் பற்றி எண்ணிப் பார்க்க வேண்டிய நிலையில் இருக்கிறோம் அல்லவா?
எனவே, மலேசிய அரசியலில் ஆளுங்கட்சியில் இருந்தாலும் எதிர்க்கட்சியில் பயணத்தை மேற்கொண்டாலும், இந்தியர்களின் நிலைபாட்டில் சரியான வெற்றிக்குரிய இலக்கு இருக்க வேண்டியது அவசியமாகும்.
அரசியல் என்பதற்காக யார் யாருக்காக முதுகைக் கொடுப்பதும், தோளைக் கொடுப்பதுமாக, தொடர்ந்து இருந்து வருமேயேனால், இறுதியில் நமது முதுகெலும்பை முறித்துக் கொள்ள வேண்டிய நிலைதான் ஏற்படும்.
எனவே, மலேசிய இந்தியர் அரசியல் வரல[ற்றில், குறிப்பாக இந்திய சமுதாயத்தின் வாழ்வுரிமைக்கான போர[ட்டம் என்ற கேள்விக்கும் கேலிக்கும் உரியதாக உருவெடுக்க வேண்டுமா என்பதை மஇகா தீர்க்கமாக சிந்திக்க வேண்டியுள்ளது.
தேசிய அரசியலிலும் மாநில அரசியலிலும் இந்திய சமுதாயத்தின் நிலைபாட்டை தற்போதைய தேசிய முன்னணி தேர்தலுக்காக ஒரு வேலைக்காரனாக, பணியாளனாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமா?
அல்லது,
சில தலைவர்களின் நல்வாழ்வுக்காகவும், அவர்களின் கையாட்களுக்காகவும் பயன்படப் போகிறதா? என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.
அல்லது இன்றைய தலைமுறையின் வாழ்வுக்காகவும் அடுத்த தலைமுறையின் எதிர்கால நல்வாழ்வுக்காகவும் திட்டமிட்டு செயல்பட போகிறதா? என்பதற்குரிய இடைவெளியில் கேள்வி எதிர்த்து நிற்கிறது! என்பதை உணரப் போகிறதா?
நமது பலவீனங்களால்...
பல்வேறு இடைவெளிக்குப்பிறகு, இடையிடையே காணப்படும் இடை செருகல் என்ன என்பதைப்பற்றி சிந்திக்க வேண்டிய பொறுப்பை அனைத்து இந்திய அரசியல் கட்சிகளும் உணரவும். அதிலும் குறிப்பாக மஇகாவுக்கு சற்று அதிகமாகவே பொறுப்பு இருக்கிறது.
இந்திய சமுதாயம் என்றால் என்ன?
அதற்கு தனிமொழி உண்டா?
தனி பண்பாடுதான் உண்டா?
இப்படி எதுவும் இல்லாததற்கு எப்படி தனித்துவம் இருக்க முடியும், தன்னுணர்வைத் தாக்கிப் பிடிக்க முடியும்? இந்திய நாட்டிலிருந்து வந்தவர்கள் இந்தியர்கள் என்று ஓர் அடையாளம் காட்டப்பட்டிருக்கிறது.
அதைத் தவிர வேறுவகையான பண்பாட்டுப் பின்னணி எதுவும் அவர்களுக்குக் கிடையாது.
(பின்குறிப்பு: இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் கட்டுரையாளர் பெரு.அ.தமிழ்மணியின் சொந்த, தனிப்பட்ட கருத்துகளாகும். அந்தக் கருத்துகள் செல்லியலின் கருத்துகளோ, செல்லியலைப் பிரதிபலிக்கும் கருத்துகளோ அல்ல. கட்டுரையாளரின் கருத்துகளுக்கு செல்லியல் எந்தவிதத்திலும் பொறுப்பேற்காது. கட்டுரையாளரைப் பின்வரும் இணைய முகவரியில் தொடர்பு கொள்ளலாம்)