கராச்சி, ஜனவரி 31 – பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள ஷியா பிரிவு இஸ்லாமியர்களின் மசூதி ஒன்றில் நேற்று பிற்பகலில் சக்தி வாய்ந்த வெடி குண்டு ஒன்று வெடித்தது.
இதில் 50 பேர் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். சிந்து மாகாணத்தில் ஷிகார்பூர் நகரின், லகிடார் பகுதியில் ஷியா மசூதி ஒன்று உள்ளது.
நேற்று வெள்ளிக் கிழமை என்பதால், சிறப்பு தொழுகைக்காக ஏராளமான இஸ்லாமியர்கள் இந்த மசூதிக்கு தொழுகை நடத்த வந்திருந்தனர்.
தொழுகை நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது, பலத்த சத்தத்துடன், சக்தி வாய்ந்த குண்டு ஒன்று மசூதிக்குள் வெடித்தது. இந்தத் தாக்குதலில் மசூதியின் கூரை தகர்ந்து அங்கிருந்தவர்கள் மீது விழுந்தது.
இதில் 50 பேர் உயிரிழந்ததாகத் தெரிய வந்துள்ளது. காயமடைந்த பலர் அருகிலுள்ள மருத்துமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், உயிரிழப்புகள் அதிகமாகும் என அஞ்சப்படுகிறது. இந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக மூத்த அதிகாரி அப்துல்லா மெஹர் கூறுகையில்,
“இந்தத் தாக்குதல் தொலைவில் இருந்து நடத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன” என்று கூறியுள்ளார். இந்த தாக்குதலுக்கு ஜுன்துல்லா தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
இது தொடர்பாக அந்தப் பிரிவின் செய்தித் தொடர்பாளர் ஃபஹத் மர்வாத் கூறுகையில், “எங்களின் எதிரிகளான ஷியா இஸ்லாமியர்களை பலி வாங்கவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டது” என்று அவர் கூறியுள்ளார்.
இந்த ஜுன்துல்லா தீவிரவாத அமைப்பு தங்களை ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்புபடுத்தி வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.