சென்னை, ஜனவரி 31 – காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக மத்திய முன்னாள் அமைச்சர் ஜெயந்தி நடராஜன் அறிவித்தார். காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி மீது அவர் சரமாரியாகக் குற்றம்சாட்டினார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “2011-இல் நான் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சராக்கப்பட்டேன். காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, சில பெரும் நிறுவனங்களுக்கு சூற்றுச்சூழல் தொடர்பாக தடையில்லாச் சான்றிதழ்கள் வழங்க வேண்டாம் என என்னிடம் வலியுறுத்தினார்”.
“இதை கடிதங்கள் வாயிலாகவும், இணையத்தளம் வாயிலாகவும், அவரது அலுவலக நிர்வாகிகள் வாயிலாகவும் வலியுறுத்தினார். இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதங்கள் நடைபெற்றன. அனைத்துக்கும் நானே பொறுப்பேற்றுக் கொண்டேன்”.
“இந்நிலையில், 2013-ஆம் ஆண்டு டிசம்பர் 20-ஆம் தேதி அப்போது பிரதமராக இருந்த மன்மோகன் சிங் என்னை அழைத்தார். என்னைக் கட்சிப் பணிக்குச் செல்ல வேண்டும் என்றும், உடனே அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்றும் கூறினார்”.
“நானும் உடனே பதவியை ராஜிநாமா செய்தேன். அப்போது, சோனியா காந்தியும், பிரதமர் சொல்வதைக் கேளுங்கள் என்று என்னிடம் கூறினார். அதன் பிறகு, டெல்லியில் நடைபெற்ற இந்திய தொழில் வர்த்தக சபை கூட்டமைப்பின் கூட்டத்தில், ராகுல் காந்தி பேசியபோது,
“சுற்றுச்சூழல் துறை சார்பில் அனுமதி கொடுப்பதில் தாமதம் ஏற்படுவதற்கு வாய்ப்பு இல்லை என்றார். இந்தப் பேச்சைக் கேட்டதும், அவரைத் தொடர்பு கொண்டு பேச முற்பட்டேன். ராகுல் காந்திக்கு வேலை பளு இருப்பதாகக் கூறினார். அதன் பிறகு பேச முடியவில்லை”.
“அதோடு, ராகுல் காந்தியின் அலுவலகத்தில் இருந்து, ஜெயந்தி நடராஜன் கட்சிப் பணிக்காக அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்படவில்லை என்றும், முறைகேட்டில் ஈடுபட்டது போலவும் செய்திகள் வெளிவந்தன”.
“மேலும், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தித் தொடர்பாளர் பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டேன். இதுதொடர்பாக சோனியா காந்தி, ராகுல் காந்தியிடம் பலமுறை விளக்கம் கேட்க முயற்சித்தேன். ஆனால், அனுமதி கிடைக்கவில்லை”.
“சுற்றுச்சூழல் துறையில் எந்த முறைகேட்டிலும் நான் ஈடுபடவில்லை. அப்படி நிரூபிக்கப்பட்டால், தூக்கு தண்டனையைக்கூட ஏற்கத் தயாராக உள்ளேன். எனவே காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுகிறேன்”.
“எந்தக் கட்சியிலும் சேரும் எண்ணம் இல்லை. காங்கிரஸ் கட்சி மீண்டும் அழைத்தாலும் மறுபரிசீலனை செய்யும் எண்ணம் இல்லை என்றார் முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன்.