டோக்கியோ, பிப்ரவரி 2 – ஜப்பானியர் கெஞ்சி கோத்தோவும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் கொலை செய்யப்பட்டதற்கு அமெரிக்க அதிபர் ஒபாமா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தை அடியோடு ஒழிக்க உலக நாடுகள் ஒன்று சேர வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் பிணைக் கைதியாக்கப்பட்டிருந்த கெஞ்சி கோத்தோவை விடுதலை செய்ய தீவிரவாதிகள் விதித்திருந்த கெடு நேற்று முன்தினம் முடிவடைந்ததால், அவர்கள் கெஞ்சியின் தலையை துண்டித்து அதனை காணொளியாக்கி இணையத்தில் வெளியிட்டனர்.
தலை துண்டித்து கொலை செய்யப்பட்டவர், செய்தியாளர் கெஞ்சி கோத்தோ தான் என்பதை காணொளி காட்சிகளின் அடிப்படையில் ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் நகடானி நேற்று உறுதிப்படுத்தினார்.
தங்களது நாட்டின் 2-வது பணயக் கைதியும் தீவிரவாதிகளால் கொலை செய்யப்பட்டதற்கு ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:- ‘‘இந்த தீவிரவாதிகளை நான் ஒரு போதும் மன்னிக்க மாட்டேன். அனைத்துலக சமூகத்துடன் இணைந்து இந்த படுகொலைகளுக்கு காரணமானவர்களை நீதியின் முன்பாக நிறுத்துவோம். தீவிரவாதிகளின் மிரட்டலுக்கு எந்த வகையிலும் ஜப்பான் அடி பணியாது’’ என்று அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அமெரிக்க அதிபர் ஒபாமா கூறுகையில், “ஜப்பானிய செய்தியாளர் கெஞ்ஜி கோத்தோவும் தீவிரவாதிகள் கொலை செய்யப்பட்டது கொடூரமான செயலாகும்”.
“ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை அடியோடு நிர்மூலமாக்கும் வரை அவர்கள் மீதான நடவடிக்கைகளை தொடர நாம் சபதம் எடுப்போம்’’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் இங்கிலாந்து, பிரான்ஸ் நாடுகளின் முக்கியத் தலைவர்களும் இந்த படுகொலைக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.