Home கலை உலகம் திரைவிமர்சனம்: ‘என்னை அறிந்தால்’ – அஜித் ரசிகர்களுக்குக் கொண்டாட்டம்!

திரைவிமர்சனம்: ‘என்னை அறிந்தால்’ – அஜித் ரசிகர்களுக்குக் கொண்டாட்டம்!

749
0
SHARE
Ad

yennai-arindhaal-review

பிப்ரவரி 5 – நெஞ்சில் உரமும், நேர்மைத் திறமும் கொண்ட ஒரு போலீஸ் அதிகாரியின் வாழ்க்கை, கடமையை செய்வதில் அவர் எதிர்கொள்ளும் சவால்கள், காதலியின் மறைவு, அவள் நினைவுகளை மறக்க மேற்கொள்ளும் கடும் போராட்டம், அதற்காக புதிய சூழல் தேடி ஒரு பயணம், வலிமையான எதிரியை வீழ்த்த மீண்டும் எடுக்கும் புதிய அவதாரம் என இயக்குநர் கௌதம் மேனன் தனக்கே உரிய கதைக் களத்தில், இம்முறை வேறு கதாப்பாத்திரங்களை வைத்து வேட்டையாடி விளையாடியிருக்கும் படம் ‘என்னை அறிந்தால்’.

தொடர் தோல்விகளில் இருந்த இயக்குநர் கௌதம் மேனன் அதிலிருந்து தன்னை மீட்டுக்கொள்வதற்காக, புதிய பரிசோதனை முயற்சிகளில் எதுவும் இறங்காமல், ஒருகாலத்தில் தனக்கு சூப்பர் டூப்பர் வெற்றியை கொடுத்த அதே போலீஸ் ஸ்டோரியிலேயே பாதுகாப்பாக பயணித்திருக்கிறார். அப்படி பாதுகாப்பாக பயணித்தும் அவரால் ரசிகர்களை திருப்திபடுத்த முடிந்ததா?

#TamilSchoolmychoice

அஜித்திற்கு நிச்சயமாக இது வேறு ஒரு இடம். இத்தனை வருட சினிமா வாழ்வில் இப்படி ஒரு தீவிர போலீஸ் அதிகாரி கதாப்பாத்திரத்தில் நடித்ததே இல்லை. ‘மங்காத்தா’, ‘ஆரம்பம்’ படங்களையெல்லாம் விட வித்தியாசமாக ஒட்ட வெட்டிய தலைமுடியுடன், மீசை வைத்து சில காட்சிகள், மீசை இல்லாமல் சில காட்சிகள், மீசை தாடியெல்லாம் வைத்து சில காட்சிகள் என தோற்றத்திலும், நடிப்பிலும் புதுமை புகுத்தியிருக்கிறார். திரையில் அஜித்தாக தெரியாமல் சத்யதேவாக மாறினாரா?

அருண் விஜய்…  விக்டர் கதாப்பாத்திரம் அருண் விஜய்க்கு ஒரு மைல் கல் என்று தான் சொல்ல வேண்டும். காரணம் கௌதம் மேனன் படத்தில் வில்லனாக நடிப்பது என்பது கதாநாயகன் கதாப்பாத்திரத்திற்கு சமம். ஆட்டம், பாட்டம், அழகு, உடற்கட்டு எல்லாம் தேவைப்படும் அந்த கதாப்பாத்திரத்திற்கு. அப்படி ஒரு தேடலில் அருண் விஜய்க்கு கிடைத்திருக்கிறது அந்த வாய்ப்பு. கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டாரா?

படத்தை அறிந்து பார்ப்போம்…

கதைச்சுருக்கம்

ajith

“உலகத்திலேயே அழகான ஒருத்தன இப்ப நான் பார்த்திட்டுக்கிட்டு இருக்கேன்” என்று முதல் சந்திப்பிலேயே அஜித்தை காதலிக்கத் தொடங்கும் அனுஷ்காவில் இருந்து கதை தொடங்குகிறது.அஜித் யாரென்று படம் பார்ப்பவர்கள் அறிந்து கொள்ளும் வரை திரைக்கதையில் அவ்வளவு தொய்வு.

ஏற்கனவே ‘காக்க காக்க’, ‘வேட்டையாடு விளையாடு’ போன்ற படங்களின் சாயல் கொண்ட பழகிப் போன காட்சிகளால் படம் பார்ப்பவர்கள் ஏமாற்றத்தில் தவித்துக் கொண்டு இருக்கையில், “சார் நீங்க ஏன் கல்யாணம் பண்ணிக்கல?” என்று செல்முருகனும், “எனக்கு பேய்னா பயம்” என்ற பதிலுடன் விவேக்கும் ஆங்காங்கே சிரிப்பு வெடிகளைத் தூவி நம்மை சற்றே ஆசுவாசப்படுத்துகின்றனர்.

கதையில் திரிஷா வந்த பின்பு காதலும் தானாக வந்து விடுகின்றது. கண்ணியமான அந்த காதல் காட்சிகளை வழக்கமாக தனது படங்களில், கவிதை போல் படுக்கையறையில் தான் இயக்குநர் நிறைவு செய்வார். அஜித் படம் என்பதாலோ என்னவோ இதில் கட்டியணைப்பதோடு நிறைவடைகிறது.அனுஷ்காவிற்கு அதுவும் கிடையாது.

இரண்டாம் பாதியில் தான் திரைக்கதை படுவேகம் பிடிக்கிறது. விக்டராக அருண் விஜயின் அட்டகாசம் படத்தின் இறுதிவரை விறுவிறுப்புடன் செல்ல உதவியிருக்கிறது.

நடிப்பு

48242-BzfHPZssCIAAEys3

நடை, உடை, பாவனை அனைத்திலும் சத்யதேவாக மாறியிருக்கிறார். ஆனாலும் தனது சால்ட் அண்ட் பெப்பர் தோற்றத்தை விடுவதாய் இல்லை. நமக்கும் அது பார்த்துப் பழகிவிட்டது.

என்ன ஒன்னு… அனுஷ்கா 16 வயசு பொண்ணு மாதிரி அஜித்தின் அழகை வர்ணிக்கும் போது தான் தல இன்னும் கொஞ்சம் இளமையாக இருந்திருக்கலாமோன்னு உறுத்துகின்றது.

“முடிய வெட்ட சொன்னாங்க.. அதான் மிலிட்டரி வேலையே வேண்டாம்னு வந்துட்டேன்” என்று ‘ஆசை’ படத்தில் பிரகாஷ்ராஜிடம் அஜித் கூறுவது போல் ஒரு வசனம் வரும். இன்று அதே அஜித் போலீஸ் அதிகாரிக்கே உரிய அத்தனை ஒப்பனைகளையும் ஏற்றுக் கொண்டு அச்சு அசலாக வாழ்ந்திருக்கிறார்.

“உன்ன மாதிரி சட்டத்தை கற்பழிக்கிற ………..பயலெல்லாம் என் முன்னாடி” என்று பல்லைக் கடித்துக் கொண்டு அஜித் பேசும் பொழுது காட்டும் முகபாவனையில் சத்ய தேவைக் காண முடிகின்றது.

ஆனால், தல வாயில வரும் வண்டி வண்டியா கெட்ட வார்த்தைகளும், “நமக்கு கொழந்த வேணாம்மா… என்ன அதுக்காக அடிக்கடி மெடிக்கல் ஷாப் போக வேண்டியது வரும்” என்று திரிஷாவிடம் அஜித் கூறும் கிக் வசனமும் கௌதமின் கைவண்ணம்.

அனுஷ்கா … என்ன ஆனதோ தெரியவில்லை… உடல் பெருத்து மிகவும் உப்பலாக இருக்கிறார். அதனால் தான் சூர்யா, ஆர்யா, சிம்பு போன்ற இளம் நடிகர்கள் படத்தில் நடித்துக் கொண்டிருந்தவர் தற்போது ரஜினி, அஜித் போன்ற சீனியர்கள் படங்களில் இரண்டாம் கதாநாயகியாக நடிக்கத் தொடங்கியிருக்கிறார். வழக்கமாக கௌதம் படங்களில் இரண்டு கதாநாயகிகளுக்கும் முக்கியத்துவம் இருக்கும்.ஆனால் இந்தப் படத்தில் அனுஷ்காவின் நடிப்பு அவ்வளவாக ஈர்க்கவில்லை. படம் முடியும் வரை அஜித்தை வச்ச கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே, நடித்திருக்கிறார்.

படம் முடிந்த பின்பும் ஹேமானிக்காவாக திரிஷா தான் நீங்காமல் மனதில் நிற்கிறார்.

அருண் அடுத்த சுற்றுக்குத் தயார்

Yennai-Arindhaal-Movie-Shooting-Pics

அருண் விஜய்… தனக்குக் கிடைத்த வாய்ப்பை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு விட்டார் என்று தான் கூற வேண்டும். கௌதம் காட்டியிருக்கும் இந்த பாதை அவருக்குப் புதியது என்றாலும், சரியாகப் பொருந்தியிருக்கிறது.

திமிரும், வலிமையும் நிறைந்த விக்டர் கதாப்பாத்திரத்தில், வித்தியாசமான தோற்றத்தில் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இரும்பு போல் ஏத்தி இருக்கும் உடற்கட்டும் அதற்கு சரியாக ஒத்துழைக்கின்றது. இந்த பாதையில் வித்தியாசமான தோற்றங்களில் வில்லனாகப் பயணித்தால் சிறப்பான எதிர்காலம் இருக்கின்றது.

ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, இசை

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டேன் மேக்தரின் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் அழகை சேர்த்திருக்கின்றது. மிகப் பிரம்மாண்டமான காட்சிகள் இல்லையென்றாலும், ஒவ்வொரு காட்சிகளும் அத்தனை அழகு.

ஒரு பாடல் காட்சியில் வரும் பகுதி, ஏற்கனவே ‘ஐ’ படத்தில் இடம்பெற்றிருப்பதைப் போன்ற உணர்வு ஏற்படுகின்றது. மற்றபடி வண்ணங்களை ரசிக்க முடிந்தது.

கௌதமின் ஆஸ்தான படத்தொகுப்பாளர் ஆண்டனியின் வேலைபாட்டில் இரண்டாம் பாதியில் அனல் தெறிக்கின்றது.

ஹாரிஷ் ஜெயராஜின் பின்னணி இசை ஏற்கனவே கௌதமின் போலீஸ் படங்களில் பயன்படுத்தப்பட்டது என்றாலும், மீண்டும் கேட்கும் போதும் ரசிக்க வைக்கின்றது.

பாடல்கள் அனைத்தும் தாமரை வரிகளில் இதயத்தை திருடினாலும், “உனக்கென்ன வேணும் சொல்லு” பாடல் மட்டும் வீடு வந்த பின்பும் நெஞ்சில் நிற்கின்றது.

சறுக்கல்கள்

அருண் விஜயைத் தவிர மற்ற வில்லன்கள் எல்லாம் சோதாவாக இருக்கும் பொழுது, கதாநாயகியைக் கொன்றது யார் என்று சஸ்பென்ஸ் உடையும் முன்பே படம் பார்ப்பவர்களுக்கு தெளிவாகத் தெரிந்து விடுகின்றது.அவனா இருப்பானோ… இவனா இருப்பானோ என்று அஜித் ஆராயும் காட்சிகளெல்லாம் ஏனோ வந்து போகின்றது. அவ்வளவு தான்.

“அவன் நிச்சயம் என்னைத் தேடி வருவான்” என்று கௌதம் படத்தில் வில்லனுக்காக கதாநாயகன் காத்திருப்பதெல்லாம் அதர பழசாகிவிட்டது. இப்பொழுதெல்லாம் அதில் பெரிதாக ஈர்ப்பு இருப்பதில்லை.

அந்த வகையில், பார்த்துப் பழகிய காட்சிகள் ஆங்காங்கே சலிப்பை ஏற்படுத்துகின்றன.

மொத்தத்தில், ‘என்னை அறிந்தால்’ – அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டம், அருண் விஜய்க்கு நல்ல எதிர்காலம், கௌதம் பட ரசிகர்களுக்கு ஏமாற்றமே!

– ஃபீனிக்ஸ்தாசன்