கொழும்பு, பிப்ரவரி 5 – இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவிற்கு வந்த பின், சிங்களர்கள் மற்றும் தமிழர்களை ஒன்றிணைக்கத் தவறிவிட்டோம் என்று அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனா ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அந்நாட்டின் 67-வது சுதந்திர தின உரையில் கூறியிருப்பதாவது:- “2009-ல் உள்நாட்டுப் போர் முடிவிற்கு வந்த பிறகும் நாட்டின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதி மக்களின் மனங்களை ஒன்றிணைக்க முந்தைய தலைவர்கள் முயற்சிக்கவில்லை”.
“தேசிய அளவிலான நல்லிணக்க நடவடிக்கைகளை நடத்திக் காட்டுவதே, நமக்கு முன்புள்ள மிகப்பெரிய சவாலான பணியாகும். இங்கிலாந்திடமிருந்து நாடு சுதந்திரம் பெற்ற பிறகு நமது சாதனைகளுக்காக நாம் மகிழ்ச்சி அடைய முடியுமா?”
“எனினும், கடந்த காலத் தவறுகளை பேசி இனி எவ்வித பயனும் இல்லை. தவறுகள், தோல்விகளை சரிசெய்வதே முக்கியம். நாட்டை ஆளும் அனைத்து கட்சிகள் மற்றும் தலைவர்களும் எதிர்கால நலன் கருதி தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்.”
“நண்பர்களை மட்டுமே உருவாக்கும் வகையில் நாட்டின் வெளிநாட்டுக் கொள்கை மாற்றி அமைக்கப்படும். வெளிநாட்டுக் கொள்கையில் உள்ள பிரச்சினைகளை நாம் தீர்க்க வேண்டும்”.
“ஐநா கோட்பாடுகளுக்கு கட்டுப்பட்டு நடந்துகொள்வோம். அண்டைநாடுகளுடன் நடுநிலையான வெளிநாட்டுக் கொள்கையை கடைபிடிப்போம்” என்று அவர் கூறியுள்ளார்.