கோலாலம்பூர், பிப்ரவரி 6 – ஓரினச் சேர்க்கை வழக்கில் தனக்கு சாதகமாகவே அடுத்த வாரம் தீர்ப்பு வரும் என எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
எனவே தனக்கு மாற்றாக பக்காத்தானுக்கு வேறு ஒருவரை அடையாளம் காண வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
“எப்போதும் சிறந்த ஒன்றையே நாம் எதிர்பார்க்க வேண்டும். ஆதாரங்களின் அடிப்படையில் சட்டம் நிச்சயமாக என் பக்கம்தான் உள்ளது.நீதி விசாரணை என்பது சட்டத்தின் அடிப்படையில் நடைபெற வேண்டுமே தவிர அரசியலின் அடிப்படையில் நடைபெறக் கூடாது. எனவே காட்சிகள் அரங்கேறட்டும். கடவுள் விருப்பப்படி நான் நீடிப்பேன்,” என்று செய்தியாளர்களிடம் அன்வார் கூறினார். ஓரினச் சேர்க்கை தொடர்பான வழக்கில் அடுத்த வாரம் கூட்டரசு நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கவுள்ளது.
இந்நிலையில் பக்காத்தான் கூட்டணிக்கு தனக்கு மாற்றாக வேறு ஒருவர் அடையாளம் காணப்படுவாரா? என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு, பதில் அளிக்கும்போதே அன்வார் மேற்கொண்டவாறு தெரிவித்தார்.
தலைமை நீதிபதி துன் அரிபின் சகாரியா தலைமையிலான நீதிபதிகள் கொண்ட அமர்வு இம்மாதம் 10ஆம் தேதி ஓரினச் சேர்க்கை வழக்கில் தீர்ப்பு வழங்க உள்ளது.அன்றைய தினம் காலை 9 மணியளவில் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அன்வார், “பக்காத்தான் என்பதை ஓர் இயக்கமாக, கொள்கை மற்றும் கோட்பாடுகளின் அடிப்படையில் இணைந்துள்ள கட்சிகள் என்ற வகையிலேயே மலேசியர்கள் பார்க்க வேண்டும். அதுதான் முக்கியம்.இந்தக் கூற்று ஏற்கப்படும் பட்சத்தில் யார் பக்காத்தானின் தலைவர் அல்லது எதிர்க்கட்சித் தலைவர் என்கிற விவகாரத்திற்கு சுமூகமாக தீர்வு காணலாம்,” என்று அன்வார் மேலும் தெரிவித்தார்.
நீதித்துறை சுதந்திரமாக செயல்படுகிறதா? என்பது அடுத்த செவ்வாய்க்கிழமை தன் மீதான வழக்கில் தீர்ப்பு வெளியானவுடன் தெரிந்துவிடும் என்று குறிப்பிட்ட அவர், தாம் குற்றவாளி என்று தீர்ப்பு அளிக்கப்பட்டால் அது இந்நாட்டின் நீதிமன்றங்கள் சுதந்திரமாக செயல்படவில்லை என்பதற்கான அறிகுறி என்றார்.
மேலும், “நான் குற்றமற்றவன். நான் செய்யாத ஒரு தவறுக்காக எதற்காக தண்டிக்கப்பட வேண்டும்? என்னைப் பொறுத்தவரை அது வினோதமானது. கடுமையான அறிக்கைகளை வெளியிட வேண்டாம் என நான் அறிவுறுத்தப்பட்டுள்ளேன். இதனால் நான் விடுதலை செய்யப்படுவது பாதிக்கப்படலாம் என்றும் கூறப்பட்டது.”
“ஆனால் நான் இன்னமும் அன்வார் தான். என்னால் அமைதியாக இருக்க முடியாது. அரசியல் பாதையை கொடூரமான மனிதர்கள் தீர்மானிக்க கூடாது என்பதே என் முடிவு. நான் வெளியிலிருந்து போராடாமல் உள்ளுக்குள் இருந்தபடி போராடுவேன். ஒருவேளை எனக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டால் அதை நாட்டின் நலன் கருதி செய்த சிறு தியாகமாகக் கருதுவேன்,” என்று அன்வார் இப்ராகிம் மேலும் கூறினார்.