ஜகார்தா, பிப்ரவரி 6 – ஓடுபாதையில் இருந்து விமானம் விலகிச் சென்றதால் இந்தோனிசியாவின் லோம்பாக் தீவில் பெரும் பரபரப்பு நிலவியது.கடந்த செவ்வாய்க்கிழமையன்று, 33 பயணிகளுடன் கருடா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஏடிஆர் ரகத்தைச் சேர்ந்த விமானம் ஒன்று இத்தீவில் தரையிறங்கியது.
அப்போது எதிர்பாராதவிதமாக ஓடுபாதையில் இருந்து சுமார் 10 மீட்டர் தூரம் வரை அந்த விமானம் விலகிச் சென்றது. ஓடுபாதைக்கு அருகே உள்ள புல்வெளியில் விமானம் சறுக்கியபடி சென்றதால் விமான நிலையத்தில் பதற்றம் ஏற்பட்டது.
எனினும், பெரியளவில் விபத்து ஏதும் ஏற்படாமல் விமானம் பின்னர் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டது. இதனால் அதில் பயணம் செய்த விமானப் பணியாளர்கள் நால்வர், ஒரு குழந்தை உள்ளிட்ட 29 பேர் காயமின்றித் தப்பினர் என கருடா விமான நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் பின்னர் தெரிவித்தார்.
அக்குறிப்பிட்ட விமானம் பாலி தீவிலிருந்து புறப்பட்டு வந்து, லோம்பாக் தீவில் தரையிறங்கியபோது இந்த எதிர்பாராத சம்பவம் நிகழ்ந்தது.