கோலாலம்பூர், பிப்ரவரி 6 – பாஸ் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ ஹாடி அவாங் பங்கேற்காவிட்டால் பக்காத்தான் கூட்டணித் தலைவர்கள் சந்திப்புக் கூட்டமானது ஞாயிற்றுக்கிழமை நடைபெறாது என ஜசெக தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் (படம்) தெரிவித்துள்ளார்.
ஜசெக மத்திய செயலவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். எனினும் ஹாடி அவாங் ஞாயிற்றுக்கிழமை கூட்டத்தில் நிச்சயம் பங்கேற்பார் என பக்காத்தான் செயலகத்தில் இருந்து ஜசெகவுக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
“கூட்டணித் தலைவர்கள் சந்திப்பு நீண்ட நாட்களாக நடைபெறவில்லை. தலைவர்கள் சந்திப்பு எனும்போது அனைத்து தலைவர்களும் பங்கேற்க வேண்டும். ஆனால் அது நீண்ட காலமாக நடைபெறவில்லை,” என்றார் லிம் குவான் எங்.
கடந்த சில வாரங்களாக ஜசெக மற்றும் பாஸ் தலைவர்களிடையே கடுமையான அறிக்கைப் போர் நிகழ்ந்து வருவது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
“எங்களைப் பொறுத்தவரையில் உண்மையாக, ஆதாரங்களின் அடிப்படையில் பேசுகிறோம். உண்மையைப் பேசும்போது அதில் வெட்கப்படவோ, அருவருப்படையவோ என்ன இருக்கிறது?” என்று பதிலுக்கு கேள்வி எழுப்பினார் லிம் குவான் எங்.
ஹாடி அவாங் பங்கேற்பார்: முகமட் சாபு
இதற்கிடையே ஞாயிற்றுக்கிழமை கூட்டத்தில் ஹாடி அவாங் பங்கேற்பார் என பாஸ் துணைத் தலைவர் முகமட் சாபு (படம்) தெரிவித்துள்ளார்.
வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெறவுள்ள பாஸ் மத்திய செயலவைக் கூட்டத்தில் பங்கேற்கும் ஹாடி அவாங், அதையடுத்து பக்காத்தான் கூட்டணித் தலைவர்கள் கூட்டத்திலும் பங்கேற்க இருப்பதாக முகமட் சாபு கூறினார்.
“ஆனால் அன்றைய தினம் என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது. ஒருவேளை அன்று எனக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டால், நானும் அக்கூட்டத்தில் பங்கேற்க மாட்டேன்,” என்றார் முகமட் சாபு.