கொழும்பு, பிப்ரவரி 10 – ராஜபக்சே ஆட்சியில், மிகப் பெரும் ஊழலுக்கு வித்திட்டது இலங்கையில் சீனா மேற்கொண்ட திட்டங்கள் தான் என சிறிசேனா அரசு கூறி வந்த நிலையில், மீண்டும் கொழும்பு துறைமுக நகர திட்டப்பணிகளை தொடர, சீனாவிற்கு சம்மதம் தெரிவித்து இருப்பது, இந்திய வட்டாரங்களில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
முன்னாள் அதிபர் ராஜபக்சே ஆட்சியின்போது கொழும்பு துறைமுக நகர திட்டத்தை செயல்படுத்த சீனா-இலங்கை இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. சீன அதிபர் ஜி ஜிங்பிங் அந்த திட்டத்தை தொடங்கிவைத்தார்.
அதன் பிறகான ஆட்சி மாற்றத்தில் மைத்ரிபால சிறிசேனா, இலங்கை அதிபராகவும், ரணில் விக்ரமசிங்கே பிரதமராகவும் பொறுப்பேற்றனர். இருவரும் சீனாவின் திட்டங்களை கடுமையாக விமர்சித்தனர். இத்திட்டம் மறுஆய்வு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், அதிபர் சிறிசேனா தலைமையில் அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், கொழும்பு நகர துறைமுக திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த சீனாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை அமைச்சரவை செய்தித் தொடர்பாளரும் சுகாதாரத் துறை அமைச்சருமான ரஜிதா சேனாரத்னா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
“கடலில் மணல் நிரப்பி உருவாக்கப்படும் கொழும்பு துறைமுக நகர பணிகளால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டன. இந்த ஆய்வு முடிவுகளில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று கூறப்பட்டுள்ளது”.
“எனவே துறைமுக நகர திட்டத்தை தொடர சீன நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திட்டத்தில் காணப்படும் சில குறைபாடுகள் களையப்படும். இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த அதிபர் மைத்ரிபால சிறிசேனா அடுத்த மாதம் சீனா செல்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.
ராஜபக்சே ஆட்சிக் காலத்தில், இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து இருந்தது. புதிய ஆட்சியில், இந்தநிலை மாறும் என நம்பிய இந்திய தரப்பிற்கு இது அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.