கொழும்பு, மார்ச் 6 – இலங்கையில் சீன அரசு முழு முனைப்புடன் செயல்படுத்தி வந்த துறைமுக நகரத் திட்டத்தை சிறிசேனா அரசு தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.
இராஜபக்சே ஆட்சியின் போது 1.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பீட்டில், கொழும்புவில் ஒரு துறைமுக நகரத்தை கட்ட சீன அரசு முயற்சிகளை மேற்கொண்டது.
ஆப்பிரிக்கா மற்றும் சில ஆசிய நாடுகளில் சீனா அமைத்துள்ள இராணுவ முகாம்களுக்கு வீரர்களை அனுப்பவும், நீர் மூழ்கிக்கப்பல்கள் மற்றும் எரிபொருள் நிரப்பும் கப்பல்கள் போன்றவற்றை நிறுத்தவும் இலங்கையில் சீனாவிற்கு வசதி மிகுந்த இடம் ஒன்று தேவைப்பட்டது.
மேலும், இந்தியக் கடல் பகுதியில் இந்தியாவிற்கு போட்டியாக ஆதிக்கத்தை செலுத்த முடிவு செய்த சீனா இந்த துறைமுக நகரத்தை இலங்கையில் ஏற்படுத்த முடிவு செய்தது.
சீனாவின் இந்த எண்ணைத்தை தடுக்கும் வகையில் இந்திய அரசு பல்வேறு எதிர்ப்புகளை தெரிவித்து வந்தது. ஆனால் இராஜபக்சே அரசு அதற்கு செவிசாய்க்கவில்லை.
இந்நிலையில் அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர், ஆளும் சிறிசேனா அரசு இந்தியாவுடன் நட்பு பாராட்டி வருகிறது. கடந்த மாதம் இந்தியாவிற்கு வருகை புரிந்த சிறிசேனாவிடம் மோடி, சீனா குறித்து பல்வேறு விவாதங்களை எழுப்பியதாக இந்திய வட்டாரங்கள் கூறுகின்றன.
அதன் பிறகு, கடந்த ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட சீனாவின் திட்டங்களை மறுபரிசீலனை செய்ய சிறிசேனா முடிவு செய்தார். கடந்த வாரம், சீனாவின் நீர் மூழ்கிக் கப்பல்கள் இலங்கையில் நிறுத்த தடை என்ற அறிவிப்புகள் வெளியான நிலையில், இலங்கை மத்திய அமைச்சரவை சீனாவின் துறைமுக நகர திட்டத்தை தாற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளது.