பெய்ஜிங், மார்ச் 1 – சீனாவின் நீர் மூழ்கி கப்பல்களை இலங்கை கடல் எல்லைக்குள் நிறுத்த இலங்கை அரசு திடீர் தடை விதித்துள்ளது. இதன் காரணமாக, இலங்கை-சீனா இடையிலான நட்பில் விரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது.
இலங்கை வெளியுறவு அமைச்சர் சமரவீராவுடன் சீன அதிபர் லீ…
இது தொடர்பாக சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இலங்கை வெளியுறவு துறை அமைச்சர் மங்கல சமரவீரா, ‘‘கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே இலங்கைக்கு வந்த அதேநாளில் எத்தகைய சூழலில் சீன நீர்மூழ்கி கப்பல்கள் கொழும்பு துறைமுகத்துக்கு வந்தன என்பது பற்றி தற்போதைய அரசிற்கு தெரியாது.
“ஆனால், எங்களது ஆட்சிக்காலத்தில் இதைப்போன்ற சம்பவங்கள் இனி நேராது என்று நாங்கள் உறுதியளிக்க முடியும்’’ என தெரிவித்துள்ளார். இதன் பின்னணியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் ஆலோசனை உள்ளது என்று இலங்கை வட்டாரங்கள் கூறுகின்றன. கடந்த மாதம் இந்தியா வந்த இலங்கை அதிபர் மைத்திரி பால சிறிசேனாவிடம் இது தொடர்பாக நரேந்திர மோடி பேசியதாக கூறப்படுகிறது.
ஆப்பிரிக்க நாடுகளில் சீனா பல்வேறு இராணுவ முகாம்களை அமைத்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த இடங்களுக்கு சீனாவிலிருந்து செல்லும் வழியில் எரிபொருள் நிரப்பிக் கொள்ளவும், வீரர்கள் ஓய்வெடுக்கவும், இலங்கை மற்றும் இந்தியப் பெருங்கடலில் உள்ள சில தீவுகளில், சீனா போர்க்கப்பல்களையும், நீர்மூழ்கிகளையும் நிறுத்தி வைப்பது ராஜபக்சே ஆட்சி காலத்தில் வழக்கமாக இருந்தது.
இதனை இந்தியாவும், அமெரிக்காவும் கடுமையாக எதிர்த்து வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.