Home நாடு அன்வார் விடுதலைக்காக போராட்டத்தில் இறங்குகிறார் நூருல் நூஹா!

அன்வார் விடுதலைக்காக போராட்டத்தில் இறங்குகிறார் நூருல் நூஹா!

600
0
SHARE
Ad

Nurul Nuha 1கோலாலம்பூர், பிப்ரவரி 11 – எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமின் விடுதலைக்காக அவரது இரண்டாவது மகளான நூருல் நூஹா ‘March to Freedom -விடுதலையை நோக்கிய அணிவகுப்பு’ என்ற பிரச்சாரத்திற்கு தலைமை வகிக்கவுள்ளார்.

இது குறித்து அன்வாரின் செகாம்புட் டாலாமிலுள்ள வீட்டில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில், நூருல் நூஹா தனது மூத்த சகோதரியும், பிகேஆரின் உதவித் தலைவருமான நூருல் இசாவால் செய்தியாளர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.

செய்தியாளர்கள் முன் கண்ணீர் விட்டு அழுத நூருல் நூஹா, “இந்த 17 வருட காலம் எங்களின் உணர்வுகளை சுழற்றி அடித்துக் கொண்டிருக்கின்றது. எது வரை இந்த போராட்டம் தொடரப்போகின்றது என்று தெரியவில்லை. ஆனால் நாங்கள் இறுதி வரை எங்கள் அப்பாவுடன் இருப்போம்” என்று உடைந்து அழுத நிலையில் நூருல் நூஹா கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

இதற்கு முன்பு கடந்த 1998-ம் ஆண்டு தனது 12 வயதில் முதல் முறையாக செய்தியாளர்கள் முன் தோன்றிய நூருல் நூஹா, 17 வருடங்களுக்குப் பிறகு தற்போது மீண்டும் இந்த போராட்டம் வாயிலாக செய்தியாளர்களை சந்திக்கின்றார்.

அன்வாரின் விடுதலைக்காக வெளிநாடுகளில் வாழும் அனைத்து மலேசியர்களையும் ஒன்று திரட்டி, உலக அளவில் இந்த விவகாரத்தை கொண்டு சென்று நியாயம் கேட்பதே தனது போராட்டத்தின் நோக்கம் என்றும் நூருல் நூஹா தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியாளர்கள் கூட்டத்தில், நூருல் இசா,  நூருல் நூஹாவுடன் அவர்களது உடன்பிறப்புகளான நூருல் இல்ஹாம், நூருல் இமான், நூருல் ஹனா மற்றும் இஹ்சான் ஆகியோரும் உடன் இருந்தனர்.

செய்தியாளர்கள் கூட்டத்திற்கு ஏன் பிகேஆர் தலைவரும், இவர்களின் தாயுமான வான் அசிசா வான் இஸ்மாயில் வரவில்லை என்ற கேள்விக்குப் பதிலளித்த நூருல் இசா, தனது உடன்பிறப்புகள் வெளியே வர நேரம் வந்துவிட்டது என்று தெரிவித்துள்ளார்.

கடந்த 17 ஆண்டுகளாக தங்களது தாயார் வான் அசிசா தங்களை வழி நடத்தி வந்ததாகவும், தற்போது அவரது பிள்ளைகள் அனைவரும் வளர்ந்து விட்டனர் என்றும் நூருல் இசா குறிப்பிட்டுள்ளார்.

பெர்மாத்தாங் பாவ் தொகுதியில் பிகேஆர் வேட்பாளராக நூருல் நூஹா நிறுத்தப்படுவாரா? என்ற கேள்விக்குப் பதிலளித்த நூருல் இசா, அதை வரும் வெள்ளிக்கிழமை பக்காத்தான் தலைமைத்துவம் தான் முடிவு செய்யும் என்று தெரிவித்துள்ளார்.