புதுடெல்லி, பிப்ரவரி 11 – நேற்றைய டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம்ஆத்மி கட்சி வரலாற்று சிறப்புமிக்க பெரும் வெற்றி பெற்றுள்ளதால் எதிர்க்கட்சியே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் ஆம்ஆத்மி கட்சி 67 இடங்களை கைப்பற்றியுள்ளது. பா.ஜனதாவுக்கு 3 இடங்களில் மட்டும் வெற்றி கிட்டியது.
நேற்று தேர்தல் முடிவுகள் வெளியானதும் மாலையே ஆம்ஆத்மி எம்எல்ஏக்கள் கூட்டம் நடந்தது. இதில் சட்டசபை கட்சி தலைவராக (முதல்–மந்திரியாக) கெஜ்ரிவால் முறைப்படி தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில், கெஜ்ரிவால் வருகிற பிப்ரவரி 14–ம் தேதி டெல்லி முதலமைச்சராகப் பதவி ஏற்கிறார். முன்பு 49 நாள் முதலமைச்சர் பதவியில் இருந்த கெஜ்ரிவால் இதே பிப்ரவரி 14–ந்தேதி தான் ராஜினாமா செய்தார்.
பதவி ஏற்பு விழா டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெறவுள்ளது. கெஜ்ரிவாலுக்கு கவர்னர் நஜீப் ஜங் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். அவருடன் மற்ற அமைச்சர்களும் பதவி ஏற்கிறார்கள்.
கெஜ்ரிவால் கடந்த 2011–ம் ஆண்டு இதே ராம்லீலா மைதானத்தில்தான் தனது ஊழல் எதிர்ப்பு போராட்டத்தை தொடங்கி நாடு முழுவதும் பிரபலம் ஆனார்.
14–ந்தேதி கெஜ்ரிவால் பதவி ஏற்கும் போது பிரதமர் மோடி மராட்டிய மாநிலத்துக்கு சுற்றுப்பயணம் செல்கிறார்.
பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு பிரதமர் மோடிக்கும், அனைத்து மத்திய அமைச்சர்களுக்கும் அழைப்பு விடுக்கப்படும் என்று ஆம் ஆத்மி தலைவர் மணீஷ் சிசோடியா தெரிவித்தார். அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று தாங்கள் விரும்புவதாகவும், கிரண்பெடிக்கும் அழைப்பு விடுப்போம் என்றும் அவர் கூறினார்.