புது டெல்லி, பிப்ரவரி 12 – அனைவருக்கும் இணையம் என்ற பேஸ்புக்கின் திட்டம், ஆசிய அளவில் இந்தியாவில் முதல் முறையாக தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் முன்னணி நிறுவனமான ரிலையன்ஸ் உடன் இணைந்து, கிராமப் பகுதிகளிலும் இணைய சேவையை எடுத்துச் செல்ல, பேஸ்புக் இந்த திட்டத்தை செயல்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் பிரிவின் தலைமை நிர்வாகி குர்தீப் சிங் கூறுகையில், “இந்தியாவில் தற்சமயம் 7 முக்கிய பகுதிகளுக்கு இந்த வசதி கொண்டு செல்லப்பட்டுள்ளது. அடுத்த 90 நாட்களுக்குள் ஏனைய 22 வட்டாரங்களுக்கும் பேஸ்புக்கின் இலவச இணைய சேவை கொண்டு செல்லப்படும். இதன் மூலம் 106.3 மில்லியன் ரிலையன்ஸ் சந்தாதாரர்கள் பயனடைவர்” என்று கூறியுள்ளார்.
இண்டெர்நெட்.ஆர்க் செர்வீஸ் (Internet.org service) என்ற பெயரில் பேஸ்புக் நிறுவனத்தால் தொடங்கப்பட்டுள்ள இந்த திட்டம், விரைவில் சாம்சுங், எரிக்சன் மற்றும் நோக்கியா செல்பேசிகளிலும் மேம்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.
இந்த வசதி மூலம் பயனர்கள் 30-க்கும் மேற்பட்ட இணைய தள சேவைகள், வேலை வாய்ப்பு மற்றும் விவசாயம் பற்றிய தகவல்கள், உடல் நலம் மற்றும் கல்வி பற்றிய தகவல்களை இணையம் மூலம் தெரிந்து கொள்ள முடியும். இவற்றுடன் பேஸ்புக் வசதியும் இலவசமாக வழங்கப்படுகிறது.
இந்த புதிய திட்டம் பற்றி பேஸ்புக் நிறுவனத்தின் முக்கிய அதிகாரி மார்க்கு மேக்லைனென் கூறுகையில், “ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நாங்கள் அறிமுகப்படுத்தி உள்ள இந்த வசதியின் மூலம் பயனர்கள் அடிப்படையான இணைய சேவையை இலவசமாகப் பெற முடியும். கூடுதல் சேவையை பெற, பயனர்கள் வழக்கமான தரவுத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்” என்று கூறியுள்ளார்.
இதுவரை 150 இணைய சேவை வழங்கும் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ள பேஸ்புக், இந்த திட்டத்தை இந்தியாவைத் தொடர்ந்து மேற்கு ஆப்பிரிக்க நாடுகளிலும் செயல்படுத்த முடிவு செய்துள்ளது.