டெட்ராய்ட், பிப்ரவரி 13 – கடந்த மாதம் அமெரிக்காவின் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸ், அதிவேக மின்சாரக் கார் ஒன்றை – ‘செவ்ரோலெட் போல்ட்’ (Chevrolet Bolt) என்ற பெயரில் அறிமுகப்படுத்தியது.
ஒருமுறை இந்தக் காரின் மின்கலத்தை (பேட்டரி) மின்சக்தி மூலம் செறிவூட்டினால் (சார்ஜ்), 200 மைல்கள் பயணிக்கக் கூடிய திறனை அளிக்கவல்லது என்று ஜெனரல் மோட்டார்ஸ் அறிவித்தது.
இந்நிலையில் இந்த காரை அந்நிறுவனத்தின் இணைப்பு ஆலை இருக்கும் டெட்ராய்ட் நகரில் உருவாக்க இருப்பதாக அந்நிறுவனம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்காக அந்நிறுவனம் சுமார் 200 மில்லியன் டாலர்கள் முதலீடு செய்ய இருப்பதாகவும் கூறியுள்ளது.
இது தொடர்பாக அந்நிறுவனத்தின் வட அமெரிக்கப் பிரிவின் தலைவர் ஆலன் பாட்டே கூறுகையில், “செவ்ரோலெட் போல்ட் மின்சாரக் கார்கள், கடந்த மாதம் டெட்ராய்ட் நகரின் ஜெனரல் மோட்டார்ஸ் கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தக் காரின் மின்கலத்தை ஒருமுறை செறிவூட்டினால், சுமார் 200 மைல்கள் எவ்வித தடையும் இன்றி நாம் பயணிக்கலாம்”
“இந்த கார்கள் டெட்ராய்ட்டின் மிக்சிகன் ஆலையில் தயாரிக்கப்பட இருக்கின்றன. போல்ட் என்பது இதன் தற்காலிக பெயர் தான். தயாரிப்பு பணி முடிந்தவுடன் அதன் பெயர் அறிவிப்புகள் வெளியாகும்” என்று அவர் கூறியுள்ளார்.
எனினும் அவர், இந்த கார்களின் தயாரிப்பு பணி எப்போது நிறைவடையும், இதன் விற்பனை அமெரிக்காவில் மட்டும் இருக்குமா அல்லது உலக சந்தைகளில் இடம்பெறுமா என்பது பற்றி எவ்வித கருத்துக்களையும் பகிர்ந்துகொள்ளவில்லை.
எவ்வாறாயினும்,இந்த கார்கள் 2016-ம் ஆண்டின் மத்திய மாதங்களில் வெளியிட வாய்ப்புள்ளதாக ஜெனரல் மோட்டார்ஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஏற்கனவே மின்சாரக் கார்கள், வர்த்தக சந்தைகளில் விற்பனை செய்யப்பட்டு வந்தாலும், போல்ட்டின் வரவு கார்கள் தயாரிப்பில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.