கோலாலம்பூர், பிப்ரவரி 13 – ஏற்கனவே அறிவித்திருந்ததன் படி, மஇகா இடைக்கால மத்திய செயலவைக் கூட்டம் இன்று மாலை நடைபெறுமா? இல்லையா? என்பது அக்கட்சி உறுப்பினர்களிடையே தற்போது கேள்விக் குறியாகியுள்ளது.
காரணம், கூட்டம் நடைபெறவிருந்த மஇகா தலைமையகத்தின் 6 -வது மாடியிலுள்ள அலுவலகத்தை மஇகா தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் பூட்டி விட்டதாக உதவித் தலைவர் டத்தோ சரவணன் ராயா போஸ்ட் இணையத்தளத்திடம் கூறியுள்ளார்.
“மத்திய செயலவைக் கூட்டம் அந்த அறையில் தான் நடக்கவிருந்தது. ஆனால் பழனிவேல் தானே சென்று அந்த அறையைப் பூட்டிவிட்டதாக தலைமையகத்தைச் சேர்ந்த பணியாளர்கள் கூறுகின்றனர். ஒரு தலைவராக இருந்து கொண்டு இவ்வளவு முட்டாள்தனமான காரியங்களை அவர் செய்து வருகின்றார். உண்மையில் அதிர்ச்சியாக இருக்கின்றது” என்று சரவணன் கூறியுள்ளார்.
இன்று அவசர மத்திய செயலவைக் கூட்டம் இருப்பதாக இடைக்கால மத்திய செயலவையின் பொதுச்செயலாளர் சக்தி வேல் அழகப்பன் அறிக்கை விட்டிருந்தார்.
ஆனால் அதை மறுத்து நேற்று அறிக்கை ஒன்றை விடுத்த பழனிவேல், சக்திவேல் பொதுச்செயலாளர் இல்லை என்றும், தான் கடந்த பிப்ரவரி 9-ம் தேதி நியமித்த டத்தோ சோதிநாதன் தான் அதிகாரப்பூர்வ பொதுச்செயலாளர் என்றும் குறிப்பிட்டார்.
இன்று நடைபெறவிருக்கும் இடைக்கால மத்திய செயலவைக் கூட்டம் செல்லாது என்றும் பழனிவேல் தெரிவித்துள்ளார்.
சுப்ரா இன்று அறிவிப்பாரா?
மஇகா மறுதேர்தலில் நடப்பு தேசியத் தலைவர் டாக்டர் சுப்ரமணியம், பழனிவேலை எதிர்த்து தலைவர் பதவிக்குப் போட்டியிடப்போவதாக மஇகா வட்டாரங்களில் கூறப்பட்டது.
அதன் படி, இன்று நடைபெறவுள்ள மத்திய செயலவைக் கூட்டத்தில் சுப்ரா தான் போட்டியிடப்போவது குறித்து அறிவிப்பார் என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில், மஇகா வியூக இயக்குநர் டத்தோஸ்ரீ வேள்பாரி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று மாலை 6 மணியளவில் திட்டமிட்டது போல் மத்திய செயலவைக் கூட்டம் நடக்கும் என்றும் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
அப்படி கூட்டம் நடைபெற்றால், பழனிவேலை எதிர்த்து தலைவர் பதவிக்குப் போட்டியிடப் போவது குறித்து சுப்ரா அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
என்றாலும், ஒரு தரப்பில் வரும் ஞாயிற்றுக்கிழமை எச்ஜிஎச் மாநாட்டு மையத்தில் கிளைத்தலைவர்களுடனான சந்திப்பில் தான் சுப்ரா தனது நிலை குறித்து அறிவிப்பை வெளியிடுவார் என்றும் கூறப்படுகின்றது.