பிப்ரவரி 13 – இரண்டு ஜென்மங்களாக பல பிரச்சனைகளால் சேர்ந்து வாழ முடியாமல் பிரிந்து போன காதல், நிகழ்காலத்தில் அதன் தடைகளைக் கடந்து ஒன்று சேர்கின்றது இது தான் ‘அனேகன்’ படத்தின் கதைக் கரு.
கடைசியாக 2012-ல் சூர்யாவை வைத்து ‘மாற்றான்’ படத்தை இயக்கிய கேவி ஆனந்த், அதன் பிறகு இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு இயக்குநராக மீண்டும் களமிறங்கியுள்ளார்.
‘வேலை இல்லா பட்டதாரி’ படத்திற்குப் பிறகு தனுஷிற்கும் இது மிகவும் நம்பிக்கையளிக்கும் படமாக அமைந்துள்ளது. முதல் முறையாக ஒரே படத்தில் மூன்று வித்தியாசமான கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக அமிரா என்ற புதுமுகம் நடித்துள்ளார்.
நடிப்பு
தனுஷ், அமிரா, கார்த்திக் என மூன்று பேரை சுற்றியே நகரும் கதையில் மூவருமே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
குறிப்பாக கதாநாயகி அமிரா புதுமுகம் என்றாலும் கூட, ஒவ்வொரு காட்சியிலும் பளிச்சென அழகுப் பதுமையாக வலம் வருவதோடு, இயல்பான நடிப்பையும் வெளிப்படுத்தியுள்ளார்.
இதழ்களை குவித்து தனுஷை பார்த்து முத்தமிடும் ஒவ்வொரு காட்சியிலும் ரசிகர்களின் நெஞ்சத்திலும் இச்சென இதழ்கள் பதிக்கிறார். (பொண்ணு தமிழ் சினிமாவ்ல கண்டிப்பா ஒரு ரவுண்ட் வரும்)
“இன்னாடா வேற சாதி இரத்தமாக்குதேன்னு பாக்குறீங்களா? உங்க சாதி பசங்க 4 பேத்த இட்டாந்து புல் பிளட் சேஞ்சு..இன்னா ஓகே வா?” என டங்காமாறியாக தனுஷ்,காளி கதாப்பாத்திரத்தில் வடசென்னை வாசியாக வெளுத்து வாங்கியிருக்கிறார்.
பரட்டைத் தலையுடன் மியான்மர் நாட்டு தொழிலாளியாகட்டும், நாகரீக உடையில் ஐடி இளைஞனாகட்டும் ஒவ்வொரு கதாப்பாத்திரத்திலும் தனது நடிப்பாலும், உடல்மொழியாலும் வேறுபாட்டை காட்டியிருக்கிறார் தனுஷ்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு மனதில் நிற்கும் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் நடிகர் கார்த்திக். இந்த படத்தில் கார்த்திக் சற்றே இளமையுடன் பளீச்சென இருக்கிறார். ஐடி நிறுவன முதலாளியாக கார்த்திக்குக்கு ரவிகிரண் கதாப்பாத்திரம் மிக அழகாகப் பொருந்தியிருக்கிறது.
இது தவிர படத்தில் ஜெகன், தலைவாசல் விஜய், ஆஷிஷ் வித்யார்த்தி, முகேஷ் திவாரி போன்றவர்களின் நடிப்பு ஈர்க்கிறது.
சற்றே சிக்கலான திரைக்கதை
‘அயன்’, ‘கோ’ படங்களின் மூலம் நமது கவனத்தை ஈர்த்த கே.வி ஆனந்த், ‘மாற்றான்’ மூலம் ஒரு இயக்குநராக கடினமான பாதையில் வித்தியாசமான கதையம்சங்களோடு பயணிக்கத் தொடங்கினார்.
விஞ்ஞான தொடர்புடைய பல விசயங்களோடு ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரர்கள் பற்றிய கதையம்சமும், திடீர் திருப்பங்களும் கொண்ட ‘மாற்றான்’ வியாபார ரீதியில் வெற்றியடைந்தாலும் கூட, அன்றைய சூழ்நிலையில் மக்களிடம் பெரிய அளவிலான வரவேற்பைப் பெறவில்லை.
அந்த வகையில், ‘அனேகன்’ படத்திலும் கவனமுடன் பார்க்க வேண்டிய அளவில் சிக்கலான திரைக்கதையை கொண்டு இரண்டு ஜென்ம காதல் கதையை, நிகழ்காலத்துடன் தொடர்பு படுத்தி இயக்கியுள்ளார்.
ஆனால் முன் ஜென்மக் காதலில் வந்த மல்லிகா கதாப்பாத்திரம், நிகழ்காலத்தில் எந்த ஒரு வலுவான காரணமும் இன்றி பாதியிலேயே இறந்து போவது, முன்ஜென்மத்தில் ஆஷிஷ் வித்தியார்த்தி தன்னைத் தானே கன்னத்தில் கத்தியால் கீறிக் கொள்வது, அந்த கதாப் பாத்திரம் தனுஷை கொல்ல வருவது போல் கதாநாயகி கனவு காண்பது. ஆனால் நிகழ்காலத்தில் இவை இரண்டும் அதற்கு நேர் மாறாக நடப்பது போன்றவை குழப்பத்தையே ஏற்படுத்துகின்றன.
படம் பார்ப்பவர்கள் முகேஷ் திவாரியை வில்லனாக நினைக்க வேண்டும் என்பதற்காக அவர் கால்சட்டைப் பைக்குள் கையை நுழைத்தபடியே காட்சிகளை அமைத்து, அதில் பார்வையாளர்களின் கவனத்தை திருப்பி இறுதியில் சஷ்பென்ஸ் உடைப்பது சூட்சமமான திரைக்கதை அமைப்பு என்றாலும் கூட, இயல்பாக இல்லாமல் படம் பார்ப்பவர்களை ஏமாற்றுவதற்காக திணிக்கப்பட்டதாகவே தோன்றுகிறது.
ஒளிப்பதிவு மற்றும் இசை
ஒளிப்பதிவாளராக கேவி ஆனந்த் பல வெற்றிப்படங்களில் பணியாற்றியவர் என்பதால், தான் இயக்கும் படங்களில் காட்சிகளை அமைப்பதில் மிகவும் நுணுக்கமாக கையாண்டு வருபவர்.
பிரம்மாண்டமான காட்சிகளுக்கும், புகைப்படங்களைப் போலான காட்சிகளுக்கும் கேவி ஆனந்த படத்தில் பஞ்சமிருக்காது.
அந்த வகையில், ‘வெப்பம்’, ‘வாகை சூட வா’, ‘ஆரம்பம்’ உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த ஓம் பிரகாஷுடன் இணைந்து ‘அனேகன்’ படத்திலும் மிக பிரம்மாண்டமான காட்சிகளையும், கண்ணைக் கவரும் வண்ணங்களையும் படத்தில் கொண்டுவந்துள்ளார்.
மியான்மர் நாட்டின் அழகையும், அந்நாட்டு மக்களின் வாழ்வியலையும் சுமார் அரை மணி நேரங்களுக்கும் மேலாகக் காட்டியுள்ளார். ஏற்கனவே மியான்மார் நாட்டின் அழகு மலேசியப் படமான வெண்ணிற இரவுகளில் மிக அழகாகக் காட்டப்பட்டிருக்கும். எதிர்காலத்தில் இன்னும் பல படங்களில் மியான்மர் நாட்டின் அழகை பல கேமரா கோணங்களில் கண்டு ரசிக்கும் வகையில் தற்போது அந்நாட்டில் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன.
ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் ‘டங்காமாறி’, ‘தெய்வங்கள் இங்கே’ பாடல்களைத் தவிர இப்படத்தில் சட்டென மனதில் நிற்கும் பாடல்கள் இல்லை. இதே கூட்டணியில் இதற்கு முன்பு வெளிவந்த ‘அயன்’, ‘கோ’ போன்ற படங்களின் அனைத்துப் பாடல்களும் படம் வெளிவருவதற்கு முன்பே நம் மனதில் இடம் பிடித்தன. காட்சிகளுக்கு ஏற்ற பின்னணி இசை ரசிக்க வைக்கின்றது.
‘அனேகன்’ வித்தியாசமான கதையம்சம் கொண்ட படமாக இருந்தாலும் சிக்கலான திரைக்கதையும், மீண்டும் மீண்டும் வரும் ஒரே மாதிரியான ப்ளாஷ்பேக் காட்சிகளும் படம் பார்ப்பவர்களுக்கு பின்பாதிகளில் சலிப்பை ஏற்படுத்துகின்றது.
மற்றபடி, ‘அனேகன்’ – கண்ணைக் கவரும் அழகு!
-ஃபீனிக்ஸ்தாசன்