துபாய், பிப்ரவரி 16 – ஆடம்பரங்களுக்கும் புதுமைகளுக்கும் பெயர் பெற்ற துபாய், சுற்றுச் சூழலுக்கு மாசு விளைவிக்காத கூகுள் கார்களை, தங்கள் நகர சாலைகளில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.
மின்கலத்தின் (பேட்டரி) மூலம் இயங்கும் இந்த கார்களை இயக்க ஓட்டுனர்கள் தேவையில்லை என்பது இதன் தனிச்சிறப்பு. பெருகிவரும் போக்குவரத்து நெருக்கடி காரணமாகவும், கார்களின் புகைகளினால் சுற்றுச் சூழல் மாசடைவதை தவிர்க்கவும் இவ்வகை கார்களை வாங்க துபாய் அரசு முடிவு செய்துள்ளது.
இந்த தானியங்கி கார்களில் கட்டுப்பாடுகளோ, ஸ்டீரிங்கோ இருக்காது. அதற்கு பதிலாக காரை இயக்குவதற்கும், நிறுத்துவதற்கும் தனித்தனி பொத்தான்கள் மட்டுமே பயன்படுத்தப்படும்.
கார்களை இயக்கத் தேவையான அனைத்து கட்டளைகளையும் காரில் மேம்படுத்தப்பட்டுள்ள மென்பொருள் கவனித்துக் கொள்ளும். இரண்டு பேர் பயணிக்கக் கூடிய இந்த கார்கள் மணிக்கு 25 மைல் வேகத்தில் செல்லகூடியதாக தயாரிக்கப்பட்டுள்ளது.
மேலும், சாலைகளை கடக்க இந்த கார்களில் லேசர் மற்றும் ரேடார் சென்சார்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்று தொழில்நுட்ப வல்லுனர்கள் கூறுயுள்ளனர்.
இந்த கார்கள் குறித்து துபாய் போக்குவரத்து துறை உயரதிகாரிகள் கூறுகையில், “சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத இந்த தானியங்கி கார்கள், போக்குவரத்து நெருக்கடிகளுக்கு சிறந்த தீர்வாக இருக்கும்.”
“இவற்றுக்கென தனி பாதைகளை அமைத்துவிட்டால், முக்கிய கடைவீதிகளில் இருந்து விமான நிலையம், ரெயில் நிலையம் போன்ற பொது போக்குவரத்து மையங்களுக்கு மக்களை பாதுகாப்பாக கொண்டு சேர்க்க முடியும். இவற்றால் சாலை விபத்துகளும் வெகுவாக குறையும்” என்று தெரிவித்துள்ளனர்.
தானியங்கித் தொழில்நுட்பத்தை மக்கள் ஏற்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த கார்களை, சுற்றுலாப் பயணிகள் விரைவில் துபாய் சாலைகளில் காணலாம்.