Home அவசியம் படிக்க வேண்டியவை பேஸ்புக்கின் பாதுகாப்பு குறைபாட்டை சுட்டிக்காட்டிய தமிழர்!

பேஸ்புக்கின் பாதுகாப்பு குறைபாட்டை சுட்டிக்காட்டிய தமிழர்!

600
0
SHARE
Ad

facebook-mobileசென்னை, பிப்ரவரி 19 – பேஸ்புக்கில் இருக்கும் பயனர்கள் மற்ற பயனர்களின் புகைப்படத் தொகுப்பை அழிக்கும் பாதுகாப்பு குறைபாட்டை லக்ஷ்மண் முத்தையா என்னும் தமிழர் கடந்த வாரம் கண்டறிந்துள்ளார்.

அதனை ஏற்றுக் கொண்ட பேஸ்புக், தங்கள் தளத்தில் இருக்கும் பாதுகாப்புக் குறைபாட்டை களைய விரைந்து நடவடிக்கை எடுத்தது. மேலும், இதனைக் கண்டறிந்த லக்ஷ்மண் முத்தையாவிற்கு 12500 டாலர்களை வெகுமதியாக அளித்துள்ளது.

உலக அளவில் அமெரிக்காவிற்கு அடுத்து இந்தியாவில், பேஸ்புக் அதிக அளவிலான சைபர் தாக்குதலை சந்தித்து வருகின்றது.  ஊடுருவல்காரர்கள் (ஹேக்கர்கள்) சிறிய அளவிலான குறைகளை கூட கண்டறிந்து அதன் வழியாக பயனர்களின் கணக்குகளில் ஊடுருவி வேலைகளை காட்டி விடுகின்றனர். பயனர்களின் தகவல் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் அளித்து வரும் பேஸ்புக், தன்னார்வலர்களையும் தங்கள் தளத்தில் இருக்கும் குறைகளை கண்டறிய ஊக்கப்படுத்தி வருகின்றது.

#TamilSchoolmychoice

பாதுகாப்புக் குறைபாடுகளைக் கண்டறிபவர்களுக்கு பல்லாயிரம் டாலர்களை வெகுமதியாக அளிக்கிறது. இதற்கு முன்பும் தமிழகத்தை சேர்ந்த அருள் குமார் என்பவர் பேஸ்புக்கின் பாதுகாப்புக் குறைபாட்டை சுட்டிக் காட்டி வெகுமதி பெற்றுள்ளார்.

இது பற்றி பேஸ்புக் நிறுவனம் கூறுகையில், “பாதுகாப்புக் குறைபாடுகளைக் களைய தொடர்ந்து போராடி வருகிறோம். எங்கள் பாதுகாப்புக் குழு அளிக்கும் விபரங்கள் மட்டும் அல்லாது தன்னார்வலர்களின் கண்டுபிடிப்புகளுக்கும் மதிப்பளிக்கின்றோம்” என்று தெரிவித்துள்ளது.

பேஸ்புக்கிடம் இருந்து வெகுமதி பெற்றுள்ள லக்ஷ்மன் முத்தையா இதுபற்றி கூறுகையில், “பேஸ்புக் செயலி ஒவ்வொரு முறையும் பயனர்களின் தகவல்களை இயக்க ‘கிராப் எபிஐ’ (Graph API) எனும் மென்பொருளை பயன்படுத்தி வந்தது. இந்த எபிஐ பேஸ்புக் செயலி இயக்கும் பொழுதோ அல்லது புகைப்படங்கள் அழிக்கும் பொழுதோ ஒரு ‘குறியீட்டை’ (Token) உருவாக்கும்.”

“ஒருமுறை எனது புகைப்படத்தை இந்த குறியீட்டைக் கொண்டு அழிக்க முயற்சி செய்து கொண்டிருந்தேன். ஆனால் அப்பொழுது அதனை செய்ய முடியவில்லை. இந்நிலையில் அண்டிரொய்டு இயங்குதளத்தைப் பயன்படுத்தி வேறொரு குறியீட்டைக் கொண்டு எனது புகைப்படங்களை அழித்தேன்.”

“மேலும் அந்த குறியீட்டைப் பயன்படுத்தி மற்ற பயனர்களின் புகைப்படங்களையும் அளிக்க முடியும் என கண்டறிந்தேன். அதனை உடனடியாக பேஸ்புக் நிறுவனத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றேன்” என்று கூறியுள்ளார்.

பேஸ்புக் குறைபாட்டை சுட்டிக் காட்டி அந்நிறுவனத்திடமிருந்து வெகுமதி பெற்ற அவருக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.