வாஷிங்டன், பிப்ரவரி 19 – அலபாமாவில் உள்ள தனது மகன், மருமகள் மற்றும் பேரக்குழந்தையை பார்க்கச் சென்ற இந்தியர் சுரேஷ்பாய் படேல் (57) அமெரிக்க காவல் துறையினரால் கடுமையாக தாக்கப்பட்ட சம்பவத்திற்கு அமெரிக்கா, இந்தியாவிடம் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளது.
குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் சுரேஷ்பாய் படேல். இவரது மகன் அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில் தங்கி பணியாற்றி வருகிறார்.
மகனை பார்க்கவும், சுற்றுப் பயணம் மேற்கொள்ளவும் படேல் அமெரிக்கா சென்றார். மகன் வீட்டில் தங்கியிருந்த படேல் அருகில் உள்ள கடைக்குச் சென்றுள்ளார். அப்போது அருகில் உள்ள வீடுகளின் வாகனப் பகுதியை உற்றுப் பார்த்தபடி சென்றுள்ளார். இதைப் பார்த்து சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். விரைந்து வந்த காவல்துறையினர் ஆங்கிலம் தெரியாத அவரை சந்தேகத்தின் பேரில் தாக்கி உள்ளனர். இதனால் அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டது. தற்போது அலபாமா மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவம் அமெரிக்காவில் வாழும் இந்தியர்களிடம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்தியர் மீது இனவெறி தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறி போராட்டத்தில் இறங்கினர். இந்தியாவும் அமெரிக்காவிற்கு கடும் கண்டனம் தெரிவித்தது. அதனைத் தொடர்ந்து அந்த காவல்துறை அதிகாரி கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் சுரேஷ்பாய் படேல் தாக்கப்பட்டதற்கு இந்தியாவிடம் அமெரிக்கா பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளது. அலபாமா மாகாண ஆளுநர் அட்லாண்டாவில் உள்ள இந்திய தூதருக்கு எழுதி உள்ள கடிதத்தில் “இந்தியர் சுரேஷ்பாய் படேல் தாக்கப்பட்டதற்கு நீதிக்கு புறம்பானது. இதற்கு அமெரிக்கா மன்னிப்பு கோருகிறது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு நீதி நிலைநாட்டப்படும் என இந்திய அரசுக்கு உறுதி அளிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.