புதுடெல்லி, பிப்ரவரி 19 – இந்தியாவிற்கு வெளிநாட்டில் இருந்து பாதுகாப்பு தளவாடங்கள் இறக்குமதி செய்யப்படுவதை 20 சதவீதம் குறைக்க திட்டமிட்டுள்ளதாக நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இதன் மூலம் இந்தியாவில் வழக்கத்தை விட கூடுதலாக 1 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்று இந்திய வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்திய இராணுவம் சார்பில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ‘ஏரோ இந்தியா’ (Aero India ) என்ற அனைத்துலக விமான கண்காட்சி பெங்களூருவில் சமீபத்தில் எலகங்கா விமானப்படை தளத்தில் தொடங்கியது. இம்மாதம் 22-ம் தேதி வரை நடைபெறும் இந்த கண்காட்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்துப் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், ”உள்நாட்டு பாதுகாப்பை உறுதி செய்ய நவீன தொழில் நுட்பங்கள் அதிகம் தேவைப்படுகின்றன. ஆனால், நமது தொழில் நுட்பம், பெரிய அளவிலான வளர்ச்சி பெறவில்லை. 30 ஆண்டுகளுக்கு முன்பு நாம் என்ன பயன்படுத்தினோமோ அதையே தற்போதும் பயன்படுத்தி வருகின்றோம்”
“மேலும், நமது நாட்டிற்கு தேவையான பாதுகாப்பு தளவாடங்களில் 60 சதவீதம் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்த இறக்குமதியை 20 முதல் 25 சதவீதம் குறைத்து, அந்த பொருட்களை நம் நாட்டிலேயே உற்பத்தி செய்தால் வழக்கத்தை விட கூடுதலாக 1-2 இலட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.”
“இராணுவத்தில் அன்னிய நேரடி முதலீடு 49 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது இந்த ஆலைகளில் இருந்து உதிரிபாகங்கள் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. எனவே நாமே உற்பத்தி செய்வது சாத்தியமான ஒன்று தான்” என்று அவர் கூறியுள்ளார்.