புதுடெல்லி, பிப்ரவரி 17 – இந்தியா-இலங்கை இடையே அணுசக்தி ஒப்பந்தம் நேற்று கையெழுத்தாகின. இதன் மூலம் சிறிசேனாவின் இந்திய வருகைக்குப் பின்னர் இந்தியா-இலங்கை இடையே நல்லுறவு வலுபெறுவதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.
“எனது இந்திய பயணத்திற்குப் பின்னர் இந்தியா-இலங்கை இடையேயான நல்லுறவு புத்துயிர் பெறும்” என்று சிறிசேனா இந்தியா புறப்படும் முன்னர் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்திருந்தார்.
அதனை மெய்பிக்கும் வகையில், தற்போது இந்த அணுசக்தி ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையே ஏற்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தியா வந்த சிறிசேனா, நேற்று இந்தியப் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பின் போது இலங்கையின் வளர்ச்சிக்காக அணுசக்தி, கல்வி, விவசாயம் போன்ற பல்வேறு துறைகளில் உதவி செய்ய இந்தியா தாயாராக இருப்பதாக இதியப் பிரதமர் மோடி தெரிவித்தார்.
அதன் படி, இலங்கையில் அணுசக்தி ஒத்துழைப்பு ஏற்படுத்துவது, இந்தியாவில் மீண்டும் உருவாக்கப்பட்டுள்ள நாளந்தா பல்கலைக்கழகத்தின் கிளைகளை அங்கு தொடங்குவது, விவசாயம், வர்த்தகம் மற்றும் கலாச்சாரத் துறைகளில் கூட்டுறவை மேம்படுத்துவது தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
சிறிசேனாவுடனான இந்த சந்திப்பு பற்றி இந்தியப் பிரதமர் மோடி கூறுகையில், “சிறிசேனவுடனான சந்திப்பும் பேச்சுவார்த்தையும் சிறப்பான முறையில் நடைபெற்றது. இதன் மூலம் இரு நாடுகளின் உறவுகள் மேலும் வலுவடையும்” என்று கூறியுள்ளார்.
இலங்கையின் புதிய அதிபராக பொறுபேற்றுள்ள சிறிசேனா, பதவியேற்ற ஒருமாத காலத்தில் அவர் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் என்பதால், அவரது இந்த இந்திய வருகை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.
கல்வி, வர்த்தகம் மற்றும் வளர்ச்சி சார்பான ஒப்பந்தங்களே இரு நாடுகளுக்கு இடையே ஏற்படுத்தப்படும் என்று விமர்சகர்கள் கூறி வந்த நிலையில், புதிய மாற்றமாக அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளன.
இதன் மூலம் இலங்கையில் சீனா இதுவரை செலுத்தி வந்த ஆதிக்கம் குறையுமா என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.