Home நாடு பழனிவேலின் அரசியல் செயலாளராக அன்புமணி பாலன் நியமனமா?

பழனிவேலின் அரசியல் செயலாளராக அன்புமணி பாலன் நியமனமா?

557
0
SHARE
Ad

கோலாலம்பூர், பிப்ரவரி 18 – மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி. பழனிவேலின் அரசியல் செயலாளராக பிரபல செய்தியாளரும், மஇகா சித்தியவங்சா தொகுதியில் உள்ள மஇகா தாமான் செத்தியாவாங்சா கிளைத் தலைவருமான அன்புமணி பாலன் நியமிக்கப் பட்டுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பழனிவேலின் அரசியல் ஆலோசகராக இருந்து வந்த டத்தோ பழனியப்பன் நீக்கப்பட்டதையடுத்து இந்தப் புதிய நியமனம் நடைபெற்றுள்ளதாகத் தெரிகிறது.

Anbumani Balan

#TamilSchoolmychoice

நேற்று முன்தினம் பழனிவேலின் உத்தரவுப்படி, பிரதமரைச் சந்திக்க டத்தோ சோதிநாதன் அவரது அலுவலகத்திற்கு சென்றபோது அவருடன் மஇகா தலைவர்கள் இருவர் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களில் ஒருவர் அன்புமணி பாலன் என்றும், மற்றொருவர் மஇகா பத்து தொகுதித் தலைவர் கே.ராமலிங்கம் என்றும் கூறப்படுகிறது.

அன்புமணி பாலனின் நியமனம் தொடர்பான கடிதத்தை பிரதமர் அலுவலகத்திற்கு பழனிவேல் அனுப்பி இருப்பதாகவும், பிரதமர் அலுவலகம் இந்த நியமனத்தை இன்னும் உறுதி செய்யவில்லை என்றும் நம்பப்படுகிறது.

மத்திய அமைச்சர்களின் அரசியல் செயலாளர்கள் நியமனத்தை பிரதமர் உறுதி செய்ய வேண்டும் என்பதுடன், அரசியல் செயலாளர்கள் பிரதமர் முன்னிலையில்தான் ரகசிய காப்பு உறுதி மொழியுடன் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அன்புமணி பாலன் தற்போது மலேசியன் டைம்ஸ்  என்ற ஆங்கில இணைய செய்தி ஊடகம் ஒன்றை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே பழனிவேலின் முன்னாள் அரசியல் செயலாளரான பழனியப்பனுக்கு மஇகாவின் ஒய்.எஸ்.எஸ். எனப்படும் சமூக வியூக அறவாரியத்தில் பொறுப்பு வழங்கப்பட இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசியல் செயலாளர் பணியில் அடிக்கடி கேமரன் மலைக்குச் சென்று பல்வேறு பணிகளைக் கவனிக்க வேண்டிய நிர்பந்தம் பழனிப்பனுக்கு ஏற்படுவதால், தன்னை அரசியல் செயலாளர் பணியிலிருந்து விடுவிக்குமாறு அவர் பழனிவேலிடம் கோரிக்கை விடுத்திருந்ததாகவும் அதன்படியே அவர் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டதாகவும் மற்றொரு தகவல் தெரிவிக்கிறது.

டத்தோ பழனிவேல் கேமரன்மலை தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.