கோலாலம்பூர், பிப்ரவரி 21 – நீண்ட இடைவெளிக்குப்பின் சரத்குமாரின் இரட்டை வேட நடிப்பில் வெளியாகும் படம் என்பதால், ‘சண்டாருதம்’ குறித்த எதிர்பார்ப்புகள் நிறையவே இருந்தன.
ஆனால், பிரபல கதாசிரியர் ராஜேஷ்குமார் கைவண்ணத்தில் முதல் பாதி கதையை சுவாரசியமாக, மர்மமான முறையில், பல முடிச்சுகளோடு கொண்டு சென்ற இயக்குநர் ஏ.வெங்கடேஷ், இரண்டாவது பாதியில், சொதப்பி விட்டார்.
பத்தாண்டுகளுக்கு முன்னால் நாம் பார்த்து விட்ட, அதே வட்டார வில்லன், அவனை ஒழிக்க ஒரு இன்ஸ்பெக்டர், அவரைப் போட்டுத் தள்ளும் வில்லன், வில்லனை ஒழிக்கப் புறப்படும் இன்ஸ்பெக்டரின் போலீஸ் நண்பன் என இப்படியாகப் பார்த்துப் பார்த்துச் சலித்த அதே சம்பவங்கள், கதாபாத்திரங்கள்!
போதாக்குறைக்கு, எம்ஜிஆர் பட காலத்தில் வருவதுபோல் குடும்பத்தையே கொண்டு வந்து சிறைக்கூண்டு கம்பிக்குள் பிணையாக வைத்துக் கொண்டு மிரட்டும் கிளைமேக்ஸ் காட்சிகளும் உண்டு.
அண்மையக் காலத்தில் ஆர்யாவின் ‘மீகாமன்’, அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ என ஆங்கிலப் படங்களுக்கு நிகரான ஸ்டைலீஷ் படங்களைப் பார்த்து விட்டு, சண்டமாருதம் சென்று உட்கார்ந்தால் பத்தாண்டுகள் பின்னோக்கிப் போன மயக்கம் ஏற்படுகின்றது.
கதை – திரைக்கதை
சரத்குமாரின் கதைக்கு திரைவடிவம் கொடுத்திருக்கின்றார் பிரபல நாவலாசிரியர் ராஜேஷ்குமார். முதல் பாதியில், சென்னை புறநகர் பகுதி, கும்பகோணம், பொள்ளாச்சி, மதுரை, என வேறு வேறு ஊர்களில் மாறுபட்ட சம்பவங்களோடு கதை தொடங்குவதால் நாமும் நிமிர்ந்து உட்கார்ந்து விடுகின்றோம்.
அதிலும், காசி கமண்டலத்தில் மூடி சீல் வைக்கப்பட்ட திரவம் – அதற்குள் ஒரு பொருள் – அதுகுறித்து டில்லி வரையில் நீளும் விஞ்ஞான ஆராய்ச்சி என்றெல்லாம் கதையில் வரும்போது, சுவாரசியமும் கூடுகின்றது.
ஆனால், மறுபாதிக்குப் பின்னர் பழைய கதை, பழைய சம்பவங்கள் என படம் போரடிக்க ஆரம்பிக்கின்றது.
ஒரே ஆறுதல் சரத்குமார்
படத்தின் ஒரே ஆறுதலான, பார்க்கக் கூடிய அம்சம் சரத்குமார். வில்லன் நடிப்பில் ஒருபுறம் கரகர குரல், மாறுபட்ட ஒப்பனையோடு அசத்துகின்றார்.
இன்னொரு பக்கம் என்கௌண்டரில்’ எதிரிகளைப் போட்டுத் தள்ளும் காவல் துறை உயர்துறை அதிகாரியாக, இன்றைய இருபது வயது இளைய கதாநாயகர்களுக்கு சவால் விடும் அளவுக்கு சாலைகளில் ஓடுகின்றார் – பாய்ந்து பாய்ந்து சண்டை போடுகின்றார் – கார்களின் மீது ஏறிக் குதிக்கிறார். கொஞ்சம் கூட தொப்பை தெரியாத கம்பீர உடலோடு வலம் வருகின்றார்.
மனுஷனுக்கு அறுபது வயதாகிவிட்டதாம்! நம்பவே முடியவில்லை! எந்த ஊர் லேகியம் என விசாரிக்க வேண்டும்!
ஆனால், சரத்குமாரின் இரட்டை வேடம் என்றாலே கதையில் இருக்கும் ஆழம், உணர்ச்சிமயம், வித்தியாசம் இவையெல்லாம் சண்டமாருதத்தில் காணவில்லை.
படத்தில் ரசிக்கத் தக்கவை
படத்திற்கு மற்றொரு பலம் சமுத்திரகனி. நியாயமான, நேர்மையான இன்ஸ்பெக்டராக கொஞ்ச நேரம் வந்தாலும், கம்பீரத்தாலும், உடல்மொழியாலும் கவர்கின்றார்.
படத்தின் இரண்டாவது பாதியில் வரும் ஓவியா கவர்ச்சிக்காக சேர்க்கப்பட்டிருக்கின்றார். பேங்காக் பின்னணியில் கனவுக் காதல், நீர்வீழ்ச்சி குளியல் என அவரைக் கொஞ்சம் ரசிக்கலாம்.
சரத்குமாரின் முறைப் பெண்ணாக, கதாநாயகியாக வரும் மீரா நந்தன் அழகாக இருந்தாலும், கவர்ச்சி காட்ட மறுத்திருப்பார் போலும். அதனால்தான், கவர்ச்சிக்காக ஓவியாவைக் கொண்டு வந்திருக்கின்றார்கள்.
நகைச்சுவை நடிகர்கள் இடை இடையே வந்து, நகைச்சுவையை அள்ளித் தெளித்தாலும், அவையெல்லாம் ரசிக்கும்படி இல்லை. மாறாக படத்தின் கதை ஓட்டத்திற்கு இடையூறாகவும் இருப்பது நன்கு தெரிகின்றது.
ஜேம்ஸ் வசந்தன் இசையில் பாடல்களோ, பின்னணி இசையோ அவ்வளவாகக் கவரவில்லை.
மொத்தத்தில் ‘சண்டமாருதம்’ – சரத்குமாரின் தீவிர ரசிகர்களுக்கு மட்டும்!
-இரா.முத்தரசன்