Home நாடு “பழனிவேலை தலைவராகக் கொண்டு வந்தது எனது தவறு”: சாமிவேலு

“பழனிவேலை தலைவராகக் கொண்டு வந்தது எனது தவறு”: சாமிவேலு

865
0
SHARE
Ad

samyvelluகோலாலம்பூர், பிப்ரவரி 22 – தனக்குப் பின்னர் மஇகாவிற்கு தலைமையேற்க பழனிவேலை அங்கீகரித்ததன் மூலம் தாம் பெரிய தவறு செய்துவிட்டதாக உணர்வதாக டத்தோஸ்ரீ சாமிவேலு தெரிவித்துள்ளார்.

மஇகாவில் தற்போது நிலவி வரும் பிரச்சினைகள் குறித்து கருத்துரைக்குமாறு செய்தியாளர்கள் கேட்டபோதே அவர் இவ்வாறு கூறினார்.

“நான் மிகுந்த வருத்தத்தில் உள்ளேன். சரியாக எடை போட்டுப் பார்க்காமல் ஒரு நபரிடம் மஇகாவை ஒப்படைத்துவிட்டேன். தற்போதைய சூழ்நிலையில் இதை மட்டுமே என்னால் சொல்ல முடியும்,” என்று மசீச சார்பில் நடைபெற்ற சீன புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்பின்போது சாமிவேலு தெரிவித்திருக்கின்றார்.

#TamilSchoolmychoice

எனினும் அடுத்த சில மாதங்களில் நடைபெறவுள்ள மறுதேர்தல் மூலம் மஇகாவில் நிலவி வரும் சிக்கல்களுக்கு தீர்வு பிறக்கும் என தாம் நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.

G-Palanivel1-200813_840_604_100“மறுதேர்தல் நடத்தப்படுவதென்பது சரியான நடவடிக்கை தான். ஆனால் அதை செயல்படுத்தப் போவது யார்? எவ்வாறு தேர்தல் நடைபெறப் போகிறது? யார் இதற்கான ஏற்பாடுகளை கவனிக்கப் போகிறார்கள் என்பதே முக்கிய கேள்வி.  மத்திய செயலவை ஒன்றுகூடி, தேர்தலை நடத்த ஒருவரைத் தேர்ந்தெடுத்தால் எல்லாம் சரியாக நடக்கும்,” என்று சாமிவேலு மேலும் கூறினார்.

2006, 2009ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற கட்சித் தேர்தல்களில் அப்போதைய துணைத் தலைவர் டான்ஸ்ரீ சுப்ராவை எதிர்த்து பழனிவேலுவை நிறுத்தியவர் சாமிவேலு.

சுப்ராவோடு இனி என்னால் வேலை செய்யமுடியாது என்றும், எனவே, அடுத்த துணைத் தலைவராக பழனிவேலுவைத் தேர்வு செய்யுங்கள் என்றும் நாடு முழுக்க சாமிவேலு பிரச்சாரம் செய்ததன் விளைவாகவே, பழனிவேலு துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.