மார்ச் 1 –மலேசிய ஆங்கில வானொலி BFM 89.9 – அலை வரிசைக்கு வழங்கிய பேட்டியொன்றில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் மிகவும் சாதகமான முறையில் பெரும்பான்மை பெற்று ஆட்சியை அமைப்போம் என்று எதிர்க்கட்சி தலைவர் அன்வார் இப்ராகிம் உறுதியாகத் தெரிவித்தார்.
அந்த பேட்டியை முழுமையாக கேட்க, கீழ்க்காணும் “அன்வாரின் வானொலி பேட்டி” என்ற வார்த்தையை அழுத்தினால் நேரடியாக வாசகர்கள் கேட்கலாம்.
‘அன்வாரின் வானொலி பேட்டி’ இங்கே கேட்கலாம்.
பாலியல் குற்றச்சாட்டுக்கள் அம்னோ உருவாக்கியவை
இந்த பேட்டியில் அன்வார் இப்ராகிம் தன்மீது இரண்டு முறை பாலியல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டதாகவும், ஆனால் நிரூபிக்கப்படவில்லை என்றும் தெளிவுபடுத்தினார்.
இந்த குற்றச்சாட்டுக்கள் என்னை அரசியல் ரீதியாக ஒழித்துக் கட்ட அம்னோ தலைமைத்துவத்தால் உருவாக்கப்பட்ட கற்பனைகள் என்றும் தான் அத்தகைய பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டவனில்லை என்றும் அன்வார் இப்ராகிம் ஒரு கேள்விக்கு பதிலளிக்கையில் மேலும் கூறினார்.
“நான் திருமணமாகி ஆறு குழுந்தைகளோடு வாழ்பவன். எனவே நான் அத்தகைய தவறான உறவு முறைகளில் ஈடுபட்டேன் என்பது முற்றிலும் பொய்” என்றும் அன்வார் உறுதியாகக் கூறினார்.
சுவாரசியமான 89.9 வானொலி பேட்டிகள்
அண்மையக் காலத்தில் ஆங்கில வானொலி ஒலிபரப்பில் 89.9 அலை வரிசை பல புதுமைகளையும் சுவாரசியங்களையும் புகுத்தி வருகின்றது.
மருத்துவம், அரசியல், சமூகம், இலக்கியம், தன்முனைப்புத் தூண்டல் என பல துறைகளைச் சார்ந்த பிரமுகர்களை பேட்டி காணும் இந்த வானொலி பின்னர் இந்த பேட்டிகளை அப்படியே முழுமையாக தனது இணையத் தளத்தில் பதிவேற்றம் செய்கின்றது.
எனவே, அந்த குறிப்பிட்ட வானொலி பேட்டியைக் கேட்க நீங்கள் தவறிவிட்டால் பின்னர் உங்களுக்கு வசதியான நேரத்தில் அந்த இணையத்தளம் சென்று நீங்கள் உங்களுக்குப் பிடித்த வானொலிப் பேட்டியைக் கேட்கலாம்.
அந்த வானொலிப் பேட்டி குறித்த விளக்கங்களும், சுருக்கங்களும் அந்த இணையத் தளத்தில் இடம் பெற்றுள்ளன.
அந்த இணையத்தளம் இதுதான்: http://bfm.my/
அன்வாரின் வானொலிப் பேட்டி ஒலிபரப்பப்படவில்லை
அன்வாரின் வானொலிப் பேட்டியில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் இந்த பேட்டி வானொலியில் இதுவரை ஒலிபரப்பப்படவில்லை.
மாறாக நேரடியாக ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ள அந்த பேட்டி அந்த வானொலியின் இணையத் தளத்தில் இடம் பெற்றுள்ளது.
“எங்களின் வானொலி தனது பேட்டிகளை ஒலிபரப்புவதற்கு முன்னால் மலேசிய பல்ஊடக தொடர்பு ஆணையத்தின் அனுமதியைப் பெறவேண்டும் எங்களின் கடந்த கால அனுபவத்தை வைத்துப் பார்க்கும் போது அன்வாரின் பேட்டியை ஒலிபரப்ப அந்த ஆணையம் அனுமதிக்காது என்பதால் அந்த வானொலிப் பேட்டியை நாங்கள் எங்களின் இணையத்தளத்தில் நேரடியாகப் பதிவேற்றம் செய்தோம்” என்று அந்த வானொலியின் நிர்வாக இயக்குநர் மாலிக் அலி மலேசிய கினி செய்தி இணையத் தளத்திடம் கூறியுள்ளார்.