Home இந்தியா இந்திய பட்ஜெட் 2015 – சராசரி மக்களுக்கு கை கொடுக்குமா?

இந்திய பட்ஜெட் 2015 – சராசரி மக்களுக்கு கை கொடுக்குமா?

673
0
SHARE
Ad

budget2015புது டெல்லி, மார்ச் 3 – மக்களைவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு மோடி ஆற்றிய உரையில், “நான் சின்ன சின்ன விஷயங்களுக்கு தான் அதிக கவனம் செலுத்துகிறேன் என பலர் என்னை விமர்சிக்கின்றனர். ஆனால் இப்படிபட்ட பல சின்ன விஷயங்கள் தான் இணைந்து, பெரிய விஷ மரமாக மாறுகின்றன. அதனால், என்னுடைய அரசு இந்த விஷயங்களை சரி செய்வதைத் தான் முக்கியமாகக் கருதுகிறது” என்று கூறியுள்ளார்.

அவர் கூறியது போல் தனிநபர்கள் எதிர்பார்த்த வருமான வரி விலக்குகளோ, கவர்ச்சி திட்டங்களோ, அந்நிய நிறுவனங்களும், தொழில் துறையினர் எதிர்பார்த்த அதிரடி சட்ட சீரமைப்புகளோ இந்த பட்ஜெட்டில் பெரிய அளவில் இடம் பிடிக்கவில்லை. மாறாக தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு, சமூக பாதுகாப்பு ஆகிய மூன்று முக்கிய அம்சங்களும் மையப்படுத்தப்பட்டுள்ளன.

ஒருபுறம் மோடி சாத்தித்து விட்டார் என்றும், இல்லை, இல்லை சாமானிய மக்களை ஏமாற்றிவிட்டார் என்று மற்றொரு சாராரும் விவாதங்கள் செய்து வரும் இந்திய பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் பற்றி கீழே காண்போம்.

#TamilSchoolmychoice

வருமான வரிச் சலுகை கைவிரிப்பு:

கறுப்புப் பணம் பதிக்கப்படுவதற்கான முக்கிய காரணமாக அதிக வருமான வரி விதிப்பு என்று கூறப்படுகிறது. இதில் மாற்றம் இருக்கும் என்று பெரிதும் எதிர்பார்த்த பலர் ஏமாந்து போகினர். மாறாக வெளிநாட்டில் சொத்து வைத்திருப்பவர்கள், அந்த தகவலை மறைத்தால், 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. தனிநபர் வருமான வரியை பொருத்தவரையில் 2.50 லட்சம் ரூபாய் வரை வரி செலுத்த தேவையில்லை.

வெளிநாட்டு நிறுவனங்களின் தொழில் வளர்ச்சிக்கு உதவி:

இந்தியாவில் தொழில்நிறுவனங்களின் வர்த்தகம் நொடித்து விட்டால், அதனை உடனடியாக மூடுவது எளிதான காரியமில்லை. பணியாளர்களுக்கு சமாதான தொகை நிர்ணயிப்பது, கடன் கொடுத்தவர்களின் பாக்கிகள் குறித்து தீர்வு எட்டுவது குறித்த சட்டங்கள் மிகவும் கடுமையானவை. இதனாலேயே பல வெளிநாட்டு நிறுவனங்கள், இந்தியாவில் தொழில் துவங்க முன்வருவதில்லை. இதற்கான சமீபத்திய உதாரணங்கள் நோக்கியாவின் சென்னை ஆலை மற்றும் கிங்பிஷேர் நிறுவனம். இந்த நிலையை சரி செய்ய நொடிவு நிலை விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

நாட்டில் உள்கட்டமைப்பு மேம்பாடு:

கட்டமைப்பை பொருத்தவரை தனியார் நிறுவனங்களுக்கு இந்தியா இலாபம் கொழிக்கும் நாடாகும். ஆனால், இந்தியாவில் பெரும்பகுதியாக இருக்கும் சாமானியர்களுக்கு இதில் எந்தவொரு பலனும் இல்லை. சராசரியான வருமானம் பெரும் ஒரு இந்தியக் குடிமகனின் கனவு இல்லம் என்பது வெறும் கனவு மட்டுமே. இதனை போக்க மோடியின் பல்வேறு திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளன.

இந்தியாவின், 75வது சுதந்திர தினத்திற்கு முன், 6 கோடி வீடுகள் கட்டப்பட வேண்டும், மின் வசதி இல்லாத, 20 ஆயிரம் கிராமங்களுக்கு மின் வசதி செய்து தரப்பட வேண்டும். 2 லட்சம் கி.மீ சாலைகள் அமைக்கப்பட வேண்டும் போன்ற பிரம்மாண்ட அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.

மேற்கூறியவை மட்டுமல்லாமல், ஊழியர்களின் சம்பள விவகாரம், முதியோர் மற்றும் பெண்களுக்கான காப்பீடு மற்றும் இதர சலுகைகள், அனைவருக்கும் வீடு, வேலை வாய்ப்பு, பினாமி சொத்து ஒழிப்பு, மத்திய செல்வ வரி ரத்து போன்ற அறிவிப்புகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

சாமானியனின் எதிர்பார்ப்பு:

இந்தியாவில் பெரும்பான்மையாக இருக்கும் மக்கள் சாமானியர்களே. மோடியிடம் அவர்கள் எதிர்பார்ப்பது இருக்க இடம், மலிவான எரிபொருள், சுகாதாரமான உணவு, அனைவருக்கும் கழிப்பிடம் போன்ற அடிப்டை வசதிகள் தான். மோடி அரசு வெளியிட்டுள்ள அறிவிப்புகளில் 50 சதவீதத்தை செயல்படுத்தினாலே இந்த மக்களின் அடிப்படை தேவைகள் நிறைவேறிவிடும்.

மோடி தான் கூறியதை நிகழ்த்திக் காட்டுவாரா என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.