கோலாலம்பூர், மார்ச் 4 – புதிய எதிர்க்கட்சித் தலைவரை தேர்வு செய்வது தொடர்பில் பக்காத்தான் கூட்டணி இனிமேலும் நேரத்தை வீணடிக்கக் கூடாது என்று முன்னாள் பிகேஆர் தலைவர்களில் ஒருவரான சைட் இப்ராகிம் கூறியுள்ளார்.
சிறை சென்றுள்ள அன்வார் இப்ராகிமுக்கு பதிலாக பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலியை புதிய எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
“அடுத்த எதிர்க்கட்சித் தலைவரை பக்காத்தான் எந்த வகையில் முடிவு செய்யப் போகிறது என்பதை வைத்தே இக்கூட்டணி அடுத்த ஆட்சி அமைப்பதில் எந்த அளவு உறுதியாக உள்ளது என்பது வெளிப்படும். அஸ்மின் அலியை இயன்ற விரைவில் எதிர்க்கட்சித் தலைவராக பக்காத்தான் தேர்வு செய்ய வேண்டும்”.
“இப்பதவிக்குரிய அரசியல் நிபுணத்துவமும் திறமைகளும் கொண்டவர் அஸ்மின் அலி. உணர்வுப்பூர்வமாக சிந்தித்து அன்வாருக்கு பதில் அவரது மனைவியையோ அல்லது மகள்களில் ஒருவரையோ இந்தப் பதவியில் அமர்த்த வேண்டும் என்று சிந்திப்பது தேவையற்ற ஒன்று,” என்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் சைட் இப்ராகிம்.
எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு அன்வார் அலி மிகப் பொருத்தமாக தேர்வாக இருப்பார் என்று குறிப்பிட்டுள்ள அவர், நாடாளுமன்ற கூட்டத் தொடர் நெருங்கி வருவதால் அஸ்மின் அலியைத் தேர்வு செய்வதில் இனிமேலும் தயக்கம் கூடாது எனக் கூறியுள்ளார்.