கோலாலம்பூர், ஏப்ரல் 18 – நஜிப்பை வெளியேற்ற துன் மகாதீர், தனது 17 ஆண்டு கால கருத்து வேறுபாடுகளை மறந்து அன்வார் இப்ராகிமை அரவணைக்க வேண்டும் என முன்னாள் சட்ட அமைச்சர் சையிட் இப்ராகிம் ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதன் மூலம் தேசத்தை ஒருங்கிணைக்கவும், தற்போதைய தலைமைத்துவத்தை அகற்றவும் முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
“அன்வார் தொடர்பான தனது தனிப்பட்ட வெறுப்புகளை மகாதீர் புறந்தள்ள வேண்டும். ஏனெனில் பிரதமர் நஜிப்பை விட அன்வார் சிறந்தவர். நாட்டை நிர்வகிப்பதில் பல வகையிலும் தோல்வி கண்டுள்ள நஜிப்புடன் ஒப்பிடுகையில் அன்வார் செய்துள்ள தவறுகள் என்பன ஒன்றுமே இல்லை.
“அன்வார் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டுள்ளார். அதுவே போதுமானது. அவர் நாட்டிற்காக நிறைய பங்களிப்பை செய்ய வேண்டியுள்ளது என்பது மகாதீருக்கும் தெரியும். இல்லையேல் பல வருடங்களுக்கு முன்பே அன்வாரை தனக்கு அடுத்தபடியாக அவர் வளர்த்தெடுத்திருக்க மாட்டார்” என்று சையிட் இப்ராகிம் கூறியுள்ளார்.
இந்த நாட்டை அன்வார் நிர்வகிப்பதை மகாதீரின் தனிப்பட்ட வெறுப்புகள் தடுத்து விடக்கூடாது என்று குறிப்பிட்டுள்ள அவர், தற்போதைய சிக்கலான சூழ்நிலையிலிருந்து நாட்டை விடுவிக்கவும், தேசத்தை ஒருங்கிணைக்கவும் மகாதீர், அன்வார் ஆகிய இருவராலேயே முடியும் என்று தெரிவித்துள்ளார்.
“இவ்வாறு நடைபெற வேண்டும் என்பதற்காக அனைவரும் காத்திருக்கிறார்கள்.ஏனெனில் கடந்த 30 ஆண்டுகளாக மலேசிய அரசியலுக்கு உருவம் கொடுத்த இரு முக்கியமான ஆளுமைகள் என்றால் அது இவர்கள் இருவர்தான். அன்வார் தந்தையின் இறுதிச் சடங்கில் மகாதீர் பங்கேற்றது நல்ல விஷயம். இது இருவருக்கும் இடையேயான உறவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்திற்கான அறிகுறி” என்று சையிட் மேலும் கூறியுள்ளார்.