காத்மாண்டு, மார்ச் 4 – பனிமூட்டம் காரணமாக காத்மாண்டு விமான நிலையத்தில் தரையிறங்கிய துருக்கி ஏர்லைன்ஸ் விமானம் ஓடுதளத்தில் இருந்து கீழே இறங்கி விபத்தில் சிக்கியது.
அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. துருக்கி ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று இஸ்தான்புல்லில் இருந்து நேபாள தலைநகர் காத்மண்டுவுக்கு 238 பயணிகளுடன் வந்தது.
காத்மாண்டு டிரிபுவான் அனைத்துலக விமான நிலையத்தில் அந்த விமானம் தரையிறங்கியது. அப்போது பனிமூட்டம் காரணமாக விமானிக்கு ஓடுதளம் தெரியவில்லை. இதனால், ஓடுதளத்தில் இருந்து தரையிறங்கிய விமானம் புல்வெளிக்குள் சிக்கி நின்றது.
அதிர்ஷ்டவசமாக விமானம் பெரும் விபத்தில் இருந்து தப்பியது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை மற்றும் பனிமூட்டத்தின் காரணமாக ஓடுதளத்தில் இருந்து விமானம் சறுக்கியதாகவும், இந்த விபத்தில் பயணிகளுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை என்றும் காத்மண்ட் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புல்வெளியில் சிக்கி நின்றதால் விமானத்தில் முன்பாகம் மட்டும் சிறிது சேதமடைந்துள்ளது. இந்த விபத்து காரணமாக இன்று காலை சிறிது நேரம் காத்மாண்டு விமான நிலையம் மூடப்பட்டிருந்தது.