கொழும்பு, மார்ச் 5 – இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதி போரின் போது முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் உத்தரவின்பேரில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐ.நா சார்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என அமெரிக்க பாராளுமன்றத்தில் 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அந்த தீர்மானங்கள் தனக்கு எதிராக திரும்பிவிடக் கூடாது என்பதற்காக ராஜபக்சே, அந்த தீர்மானங்களை எதிர்த்து வாக்களிக்கவும், அதனை தோற்கடிப்பதற்காகவும் சில அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு லஞ்சம் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
அமெரிக்காவில் உள்ள முக்கிய புள்ளிகளின் உதவியுடன் இந்த லஞ்சப்பணம் கைமாறியதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது, இலங்கையில் சிறிசேனா தலைமையில் புதிய ஆட்சி அமைந்துள்ளதால், இந்த விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
ராஜபக்சேவின் சார்பில் அமெரிக்காவில் உள்ள சில வணிக நிறுவனங்கள் இதற்கு உடந்தையாக இருந்ததற்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு லஞ்சப்பணம் கைமாற்றப்பட்டதற்கும் தேவையான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக இலங்கை வட்டாரங்கள் கூறியுள்ளன.
இந்நிலையில், இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக உரிய விசாரணை நடத்துமாறு வெளியுறவு துறை அமைச்சர் மனகல் சமரவீராவுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாக இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.