கோலாலம்பூர், மார்ச் 5 – மத்திய செயலவையின் அனுமதியின்றி எந்த ஒரு மஇகா உறுப்பினரும் கட்சிக்கு எதிராக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க இயலாது என்பது மஇகா சட்டவிதிகளில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ பழனிவேல் உட்பட மூன்று பேர் சங்கங்களின் பதிவிலாகாவிற்கு எதிராக தாக்கல் செய்திருக்கும் வழக்கு குறித்து வழக்கு தொடுத்தவர்களின் ஒருவரான டத்தோ எஸ்.சோதிநாதன் கூறுகையில், “கட்சிக்கு எதிராக வழக்கு தொடுப்பதாக இருந்தால் மட்டுமே மத்திய செயலவையின் அனுமதி தேவை, ஆனால் இது சங்கங்களின் பதிவிலாகாவிற்கு (ஆர்ஓஎஸ்) எதிரான வழக்கு” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “மஇகா-வில் உறுப்பினர்கள் தங்களது உரிமைகள்,கட்டுப்பாடுகள், கடமைகள் மற்றும் சலுகைகள் போன்றவை தொடர்பான எந்த ஒரு விவகாரத்திற்கு மத்திய செயலவையின் முடிவின் படி நடக்க வேண்டும்” என சட்டப்பிரிவு 91 -ல் இருப்பதாக குறிப்பிட்ட சோதிநாதன், தாங்கள் சட்டத்திற்கு உட்பட்டு நடப்பதாகத் தெரிவித்துள்ளார்.
2013-ம் ஆண்டு நடந்த தேர்தல் செல்லாது என்று அறிவித்துள்ள ஆர்ஓஎஸ்-ன் முடிவுக்கு எதிராக தான் தாங்கள் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் சோதிநாதன் தெரிவித்துள்ளார்.
“இந்த வழக்கினால் எந்த பிரச்சனையும் இல்லை. கட்சியின் சட்டத்திற்கு உட்பட்டு தான் நாங்கள் இதை செய்கிறோம்” என்று சோதிநாதன் கூறியுள்ளார்.
கடந்த பிப்ரவரி 24-ம் தேதி, பழனிவேல் சார்பில் முன்னாள் பொதுச்செயலாளர் ஏ.பிரகாஷ் ராவ், சோதிநாதன் மற்றும் உதவித்தலைவர் டத்தோ எஸ்.பாலகிருஷ்ணன் ஆகியோர் மறுதேர்தல் குறித்த ஆர்ஓஎஸ் முடிவுகளுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்தனர்.
இதனிடையே, கடந்த திங்கட்கிழமை, கட்சியின் தேசிய துணைத்தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் தலைமையில் நடைபெற்ற மத்திய செயலவை கூட்டம் தவறு என்றும் சோதிநாதன் தெரிவித்துள்ளார்.
கட்சியின் துணைத்தலைவர் மத்திய செயலவையைக் கூட்டவதற்கான அதிகாரம் கட்சியின் சட்டப்பிரிவுகளில் எங்குமே இல்லை என்றும் சோதிநாதன் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மார்ச் 3-ம் தேதி, மஇகா-வின் முன்னாள் வியூக இயக்குநரான டத்தோஸ்ரீ வேள்பாரி விடுத்த அறிக்கையில், மத்திய செயலவையின் அனுமதியின்றி சங்கங்களின் பதிவகத்தின் (ஆர்ஓஎஸ்) மீது சட்ட நடவடிக்கை எடுத்துள்ள டத்தோஸ்ரீ பழனிவேல், கட்சியின் சட்டவிதிகளுக்கு இணங்க, அதன் உறுப்பினர் தகுதியை இழந்துள்ளார் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.