Home அவசியம் படிக்க வேண்டியவை முரசு 30ஆம் ஆண்டு விழா: “முரசுடன் சேர்ந்து வளர்ந்தது நயனம்” – ஆதி.இராஜகுமாரன் நினைவலைகள்!

முரசு 30ஆம் ஆண்டு விழா: “முரசுடன் சேர்ந்து வளர்ந்தது நயனம்” – ஆதி.இராஜகுமாரன் நினைவலைகள்!

1060
0
SHARE
Ad

கோலாலம்பூர், மார்ச் 7 –(எதிர்வரும் மார்ச் 14ஆம் தேதி சனிக்கிழமை, கோலாலம்பூர், பிரிக்பீல்ட்சில் உள்ள நுண்கலைக் கோயில் மண்டபத்தில் மாலை 7.00 மணி முதல், இரவு 9.30 மணி வரை, “இணைமதியம்” என்ற தலைப்பில் நடைபெறவிருக்கும் முரசு அஞ்சல் 30ஆம் ஆண்டு நிறைவு விழா – மற்றும் செல்லினம், செல்லியல் தளங்களின் புதிய தொழில் நுட்ப மேம்பாடுகள் அறிமுகம் காணும் தொழில் நுட்ப விழா – குறித்து நமது நாட்டின் மூத்த பத்திரிக்கையாளரும், ‘நயனம்’ வார இதழின் ஆசிரியருமான ஆதி.இராஜகுமாரன் (படம்) தனது கடந்த கால நினைவலைகளோடு வழங்கியிருக்கும் சிறப்புக் கட்டுரை இது) 

Rajakumaran Photo 11988இல் நயனம் இதழைத் தொடங்கும் முயற்சியில் ஈடுபட்டபோது எதிர்கொண்ட மிகப் பெரிய சவால் அச்சுக்கோர்ப்புதான். அந்தக் காலத்தில் கணினி விலையும் அதிகம்.

அதில் பயன்படுத்துவதற்கான தமிழ்ச்செயலி தமிழ்நாட்டில் விற்கப்படுவதாகக் கேள்விப்பட்டேன். விலையும் அதிகமாக இருந்தது. அவ்வளவு விலை கொடுத்து வாங்கி இங்கு சரியாகச் செயல்படாவிட்டால் என்ன செய்வது என்ற தயக்கமும் இருந்தது.

#TamilSchoolmychoice

இந்தக் காலக்கட்டத்தில்தான் கணினியும் முரசு செயலியும் எனக்கு அறிமுகமானது. சிங்கப்பூர் எழுத்தாளர் ந.கோவிந்தசாமி திரு முத்தெழிலனை எனக்கு அறிமுகப்படுத்தினார்.

தலைநகர் ஈப்போ சாலையில் உள்ள முருகன் கோயில் வாசலில் நாங்கள் முதல் முறையாக சந்தித்துக் கொண்டோம். அந்த நட்பு இன்று வரை தொடர்கிறது.

அப்போது முரசு தமிழ்ச்செயலி, பத்திரிக்கைத்துறை பயன்பாட்டின் தொடக்க நிலையில் இருந்தது. லேசர் அச்சு சாதனத்தில் எழுத்துக்களை அச்சிடும் முயற்சியில் முரசு ஈடுபட்டிருந்தது எனக்கு நல்ல வாய்ப்பாக அமைந்தது.

இதற்கிடையில் தமிழில் தட்டச்சு செய்வதில் பழகிவிட்டோம். கணினியில் அச்சுக்கோத்து லேசர் அச்சு சாதனத்தில் எழுத்துக்களை ஒரே பத்தியாக அச்சிட்டு அதை எடுத்து வெட்டி பக்கங்களாக ஒட்டி அதில் தேவையான தலைப்புகளையும் படங்களையும் எழுதி பிலிம் எடுத்து அச்சகத்துக்கு அனுப்ப ஆரம்பித்தோம்.

தொடக்கத்தில் ஒரு ஏ4 தாளின் ஒரு பக்கத்தில் ஒரே ஒரு பத்தியாகத்தான் செய்திகளை அச்சிட்டு எடுக்க முடிந்தது. அடுத்து தேவையான பத்திகளைப் பிரிக்கும் வசதியும் ஏற்பட்டது. அக்காலத்தில் தமிழ்ப்பத்திரிக்கை துறையில் இவ்வாறு கணினியில் அச்சுக் கோர்த்து பக்கங்கள் தயாரிப்பது பெரிய புரட்சியாக விளங்கியது.

முரசுவைப் பயன்படுத்திய முதல் நாளிதழ் “தமிழ் ஓசை”

அப்போது தமிழவேள் ஆதி. குமணன் பொறுப்பில் இருந்த தமிழ் ஓசை நாளிதழ் அச்சுக்கோர்ப்புப் பிரிவை நயனம் வழியில் கணினி மயமாக்க நிர்வாகத்தினர் விரும்பினார்கள். மலேசிய வானொலி முன்னாள் தலைவர் திரு இரா. பாலகிருஷ்ணன் அவர்கள் அப்போது தமிழ் ஓசை இயக்குநர் வாரியத் தலைவராக இருந்தார்.

திரு முத்தெழிலன் தமிழ்ஓசை நிர்வாகத்தைச் சந்திக்க ஏற்பாடு செய்தேன். அச்சந்திப்பில் திரு இரா. பாலகிருஷ்ணனும் திரு ஆதி. குமணனும் இன்னும் சிலரும் கலந்து கொண்டார்கள். முரசு செயலியைப் பற்றி திரு முத்தெழிலன் விளக்கினார். அவரது விளக்கத்தில் மன நிறைவு கொண்ட திரு இரா. பாலகிருஷ்ணன், தமிழ் ஓசை நாளிதழில் முரசு செயலியைப் பயன்படுத்த ஆவன செய்யுங்கள் என்று திரு முத்தெழிலனைக் கேட்டுக் கொண்டார்.

முதன் முதலில் ஒரு நாளிதழுக்கு முரசு செயலியைப் பயன்படுத்தப்படுவதைப் பற்றி திரு முத்தெழிலனுக்கு சிறு தயக்கம் இருந்தது. இருந்தாலும் அதற்கான பணிகளை அவர் உடனே மேற்கொண்டார். தமிழ் ஓசை வெற்றிகரமாக முரசு கணினி எழுத்தில் வெற்றிகரமாக வெளிவர ஆரம்பித்தது.

முரசுவைப் பயன்படுத்திய முதல் வார இதழ் ‘மயில்’ – இரண்டாவது இதழ் ‘நயனம்’

அதன் பிறகு மலேசியாவில் அப்போது இருந்த எல்லாப் பத்திரிக்கைகளும் முரசு செயலியைப் பயன்படுத்தி வெளிவரத் தொடங்கின. முரசு தமிழ்ச்செயலியைப் பயன்படுத்தி பத்திரிக்கைப் பக்கங்களைத் தயாரித்த முதல் இதழ் மயில் வார இதழ். இரண்டாவது இதழ் நயனம். முதல் நாளிதழ் தமிழ் ஓசை.

NAYANAM-cover logoசில ஆண்டுகளில் விண்டோவ்ஸும், பேஜ்மேக்கர், போட்டோஷாப் போன்ற செயலிகளும் மெல்ல அறிமுகமானது. புதிய செயலிகளின் வருகைக்கு ஏற்ப முரசு செயலியும் ஆண்டுக்கு ஆண்டு மேம்பாடு கண்டு வந்தது.

அந்தக் காலத்தில் தமிழ்நாட்டில் இருந்து செய்திகளை அனுப்ப முரசு செயலி அமைத்த ஒவ்வொரு படிக்கட்டிலும் நயனம் நடந்து முன்னேறியது. தமிழ் நாட்டில் தமிழில் முதன் முதலில் அச்சுக்கோர்க்கப்பட்ட செய்திகள் இணையம் வழியாக இங்கு வந்து சேர்ந்தபோது நிலவில் முதன்முதலில் காலடி வைத்ததுபோல் மகிழ்ச்சியில் பொங்கினோம்.

முரசு செயலிஉருவாக்க வல்லுநர் முத்தெழிலனும் விற்பனைத்துறை அதிகாரி திரு இளவரசும் இந்தப் பயணத்தில் எங்களைக் கைப்பிடித்து அழைத்துச் சென்றதை மறக்க முடியாது.

இப்போது கணினியில் தமிழில் அச்சுக்கோத்து, பல மைல் தூரத்தில் உள்ள வடிவமைப்பாளருக்கு மின்னஞ்சலில் அனுப்புகிறோம். அவர்கள் பக்கங்களாக வடிவமைத்து திருப்பி அனுப்புவார்கள். அவற்றைச் சரிபார்த்து அச்சகத்துக்கு மின்னஞ்சலில் அனுப்புகிறோம். எவ்வளவோ அலைச்சல், நேரம் மிச்சம்.

இப்போதும் உள்ள தமிழ்ப்பத்திரிக்கைகளில் அச்சுப் பிரிவில் பணியாற்றுபவர்களில் ஓரிருவர் நயனத்தில் கற்றவராக இருப்பார். அல்லது பணியாற்றியவராக இருப்பார். அந்த அளவுக்கு அதிகமானோர்க்கு நயனம் பயிற்சி அளித்தது.

முரசு தமிழ்ச் செயலி வந்த பிறகு வீட்டுக்கு வீடு கணினியில் தமிழ் முழங்கியது. எல்லோரும் தட்டச்சு செய்யவும் வடிவமைக்கவும் எளிதில் கற்றுக் கொண்டார்கள். அச்சுக் கோர்த்து வடிவமைக்கும் செலவு அதிக அளவில் குறைந்தது.

இரண்டு அம்சங்களிலும் மலேசியாவில் முரசு செயலி கைகொடுத்தது. தமிழகத்தைவிட குறைந்த விலைக்கு முரசு செயலிகள் கிடைத்தன. மிக எளிய முறையில் கணினியையும் தமிழ்ச்செயலியையும் இயக்கும் முறையை முரசு செயலி நிறுவனத்தார் குறிப்பாக திரு இளவரசு எல்லோருக்கும் கற்றுக் கொடுத்தார்.

அவர் தொலைபேசி வழியாகவும் நேராக வந்தும் எங்களுக்கு ஏற்பட்ட சிக்கல்களைப் போக்கி உதவியது மறக்க முடியாது.

முரசு செயலி வளர்ச்சியின் ஒவ்வொரு திருப்பத்திலும் நயனம் இதழ் அன்று முதல் இன்றுவரை தொடர்ந்து வந்து கொண்டிருப்பதில் மிகவும் பெருமை அடைகிறோம்.

பதிப்புத் துறையை எளிமையாக்கி இனிமையும் தந்தற்கு திரு முத்தெழிலன் அவர்களுக்கும் முரசு நிறுவனத்தாருக்கும் நயனத்தின் மனங்கனிந்த நன்றி.

-ஆதி.இராஜகுமாரன்